Tuesday 21 April 2015

அக்கினிக் குஞ்சாக வந்தான்

அக்கினிக் குஞ்சாக வந்தான் - அவன்
ஆய்வுலகில் அறிவுத் தீ வைத்தான்
பற்றியெழுந்தது பல் ஆய்வு – பார்
பாரெங்கும் தமிழியல் ஆய்வு

ஏற்றுங்கள் கொடியேற்றுங்கள் - எம்
நாயகன் புகழ்க்கொடி ஏற்றுங்கள்
சாற்றுங்கள் உரை சாற்றுங்கள்
தனி நாயகன் உழைப்பினைச் சாற்றுங்கள்
கரம்பன் தந்த அரும்பொன் நாயகன்
காவலன் தமிழ்ப் பாவலன்
வரம்பு கடந்து நாடுகள் சென்ற
வல்லவன் இவன் நல்லவன்
ஊதுங்கள் சங்கூதுங்கள்
இவ்வுலகமறிந்திட ஊதுங்கள்
சாது நிலையிலே வாழ்ந்தவனாம்
தனிநாயகன் தமிழ்ப்பணி சாற்றுங்கள்
பதினொரு மொழிகள் கற்றவன் - இவன்
பாiஷ பாண்டித்யம் பெற்றவன்
இவனொரு துறவி எனினும் - தமிழை
இறுகப் பிணைத்த இல்வாழ்வான்.
அறையுங்கள் முரசறையுங்கள் - இந்த
அகிலமறிந்திட அறையுங்கள்
இறைபணியோடு தமிழ்ப்பணி செய்த
இவன் பணி உலகுக்குரையுங்கள்
மதம் பிரதேசம் சாதிகளென்ற
மதங்கள் கடந்த ஞானியாம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
கூட்டிய உத்தம யோகியாம்
ஆடுங்கள் கூத்தாடுங்கள் - இங்கு
அனைவரும் பார்த்திட ஆடுங்கள்
நாடுக நாடுகள் என்றேயலைந்த
நாயகனை வாழ்த்தி ஆடுங்கள்
மெல்லத் தமிழினிச் சாகும் என்ற
மேற்கு நாட்டவர் சொல்லினை
மெல்ல மெல்லவே சாகவைத் தந்த
மேற்கிலே தமிழ் சொன்னவன்
பாடுங்கள் கவி பாடுங்கள் - இங்கு
பலரும் கேட்டிடப் பாடுங்கள்
வாடிய தமிழ்த்தாய் வாட்டம் போக்கிய
வள்ளல் புகழினைப் பாடுங்கள்
அமிழ்தினுமினிய அழகிய தமிழில்
அடிகளார் புகழ் பாடுக
தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க
தமிழ் மொழி வாழ்க என்றாடுக
singers_Mokanadasan
,Krisnamenon
Music_Jude Nirosan
இது நான் எழுதிய இசைப்பா தனிநாயக அடிகாளாரின் நினைவு விழாக் குழுவுக்கு என்னை மட்டக்களப்பு சமூகம் தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டது.அவரது நினைவாக ஒரு பாடல் இறுவட்டு(DVD) வெளியிடுவதென முடிவு செய்தோம்அவ்விறு வட்டில் வந்தபாடல் இது.
நண்பர்களுக்கும் பகிருங்கள்
.பாடல் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தையும் எழுதுங்கள்
அன்புடன்
மௌனகுரு

No comments:

Post a Comment