Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையம் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 4

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - 4
________________________________________________________
மௌனகுரு
சோழர் காலத்தின் சமூக அமைப்பினை விளங்கிக் கொள்ள அதனுடைய அரசுபற்றியும் அவ்வரசின் அதிகாரக் கட்டமைப்பு பற்றியும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
சோழர் காலத்து அரசு பற்றி எழுதிய மு. அப்பாத்துரை, மகாலிங்கம் போன்றோர் அவ்வரசஅதிகாரத்தினை ஒருமைத் தன்மை கொண்ட மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது மையத்திலே சகல அதிகாரங்களையும் கொண்டு சகல நாடுகளையும் தனது நேரடிப் பார்வையின் கீழ் வைத்துக் கொண்ட ஒருவகையான அரச அதிகாரம் என்று இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்
. ஆனால் இது பற்றி ஆராய்ச்சி செய்த பேர்ட்ரன் ஸ்ரெயின் அவர்கள் சோழ அரச அதிகாரத்தை வேறு வகையாக விளக்குவர்.
சோழ அரசு பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அரச அதிகாரக் கட்டமைப்பு என்று பேர்ட்றன் ஸ்ரெயின் அதனைக் கூறுகின்றார்
. பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட இவ்வரச அதிகார கட்டமைப்பில் மூன்று கூறுகள் காணப்பட்டன.
ஒரு கூறு மையம் ஆகும்.
அடுத்த கூறு மையத்தினைச் சுற்றியிருந்த இடைநிலை ஆகும்
. அடுத்த கூறு இடைநிலையைச் சுற்றியிருந்த விளிம்பு ஆகும்
. ஒவ்வொரு கூறுகளையும் மும்மூன்று கூறுகளாக வகுக்கலாம்.
மையத்தினைக் கூட மையம் இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இடைநிலையினைக் கூட மையம், இடைநிலை,விளிம்பு எனப் பிரிக்கலாம்.
விளிம்பினைக் கூட மையம், இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இவ்வண்ணம் ஒவ்வொரு மண்டலமும் மும்மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று அவர் விளக்குவார்
. மையம் என்பது அரச அதிகாரம் அதிகம் நிலவிய இடம்.
இடைநிலை என்பது அரசஅதிகாரம் குறைவாக நிலவிய பகுதி.
விளிம்பு என்பது அரச அதிகாரம் மிகக் குறைவாக நிலவிய பகுதி.
காவேரிக் கரையையும், அதையொட்டியிருந்த விளை நிலங்களையும் உள்ளடக்கி இருந்த பிரம்மதேய காணிகள், வேளாண்மைக்காணிகள், கோயில் காணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பிரதேசத்தையே மையம் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த மையத்திலேதான் அரசனுடைய மாளிகை இருந்தது. அரசனுடைய முக்கிய காரியாலயங்கள் இருந்தன. அரசனுடைய முக்கியமான படைகள் இருந்தன.
இதைச் சுற்றியிருந்த பகுதியினை அவர் இடைநிலை என்று கூறுவார். இந்த இடைநிலையிலே தான் தொண்டை மண்டலம் பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், நடுவண் நாடுகள், போன்ற நாடுகள் இருந்தன இந்த மண்டலங்களை ஆண்டவர்கள் மண்டலாதிபதிகள.; இந்த மண்டலாதிபதிகள் சோழ அரசர்களின் கீழ் பணிபுரிந்தவர்களாவர். இவர்களுக்கு நிலங்களும் படைகளும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் மைய அரச அதிகாரம் குறைவாக இருந்தது.
விளிம்பிலே இருந்த நாடுகள் தான் கங்கபாடி, நுளம்பாடி, போன்ற நாடுகளாகும். இங்கும் கூட அந்தந்த நாட்டு மன்னர்களே ஆண்டனர். அல்லது அரசர்களினால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் அதனை ஆண்டனர். இங்கு மைய அதிகாரம் மிகக் குறைவாக இருந்தது. இவர்கள் அரசுக்கு திறை செலுத்திவிட்டுச் தத்தம் நாட்டைத் தாமே ஆண்டனர்.
காவேரி ஆறு சோழ ஆட்சியில் முக்கியமாக விளங்கியது.
காவேரி ஆற்றை ஒட்டி மிகுந்த நீர்ப்பாசன வசதி பெற்ற நிலங்கள் இருந்தன. இந்த நீர்ப்பாசன முறைமை அதிக பயிர் விளைச்சலைத் தந்தது. இக்காவேரி நிறைந்து பயன் தரும் பகுதிகள் சோழ மண்டலமாகவும்
, காவேரி அதிகபயன் தராது வற்றி ஓடுகின்ற நீர்ப்பாசன வசதியும் அதிக விளைச்சலும் குறைந்த பகுதிகள் இடைநிலை மண்டலமாகவும்
,காவேரி செல்லாத, நீர்ப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமிகளாகயிருந்த, இங்கு ஒப்பீட்டளவில் விளைச்சல் மிக்க குறைந்த பகுதிகள் விளிம்பு மண்டலமாகவும்
சோழர் ஆட்சியில் இருந்தமையினை நாம் காணுகின்றோம்.
இவ்வகையிலே பேர்ட்டன் ஸ்ரைன் நீர்ப்பாசனப் வசதியும் பொருளாதாரப் பலமும் நிறைந்திருந்த பகுதியினை மையப்பகுதி என்றார். அங்குதான் விளைநிலங்கள் அதிகமாக இருந்தன. அரச அதிகாரம் அங்குதான் வலிமையாக இருந்தது.
அதைச்சூழ இருந்த இடைநிலைப் பகுதியிலே விளைநிலங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. அரசன் அங்கு ஆட்சிபுரியவில்லை. மண்டலாதிபதிகள் ஆண்டார்கள். அங்கே அரச அதிகாரம் பலவீனமாக இருந்தது.
விளிம்பு நிலையிலே விளை நிலங்கள் இடைநிலை விளைநிலங்களை விட மேலும் குறைவாக இருந்தன. அங்கேயும் அரச அதிகாரம் இருந்தது. ஆனால் அது சடங்காசாரமாக இருந்தது.
இவ்வண்ணமாக பேர்ட்டன் ஸ்ரைன் மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்கின்ற மகாலிங்கம், அப்பாத்துரை போன்றவர்களின் கூற்றுக்களை மறுத்து கூறுபட்ட அரச அதிகாரம் அங்கிருந்ததென்று தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
பேர்ட்றன் ஸ்ரைன் இவ்வண்ணம் கூறுகின்ற கருத்துக்களை நொபுறு கரோசிமா என்கின்ற ஜப்பானிய ஆய்வாளர் மறுத்துரைக்கின்றார்.
அவர் முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், போன்ற மன்னர்களின் காலத்திலே மையப்பட்ட அதிகாரம் இருந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றார்.
காரணம்,நாடு,வளநாடு என்பவற்றைத் தாண்டி அதிகாரம் செலுத்துகின்ற நிலமை அதாவது அதிகாரிகளின் குறுக்கீடு இருந்திருக்கிறது என்றும்
முதலாம் இராஜராஜன் காலத்தில் நாட்டிற்கும் மண்டலத்திற்கும் இடையில் வளநாடு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அரச அதிகாரம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றது என்றும்
முதலாம் குலோத்துங்கன் ஜெயம் கொண்ட சோழ மண்டலத்தில் வளநாடு என்கின்ற கூற்றினை அமைத்து அரச அதிகாரத்தினை மையப்படுத்தினான் என்றும்
மண்டலங்களுக்கு ஊடாக அவன் நில அளவை செய்திருக்கிறான். என்றும்
முதலாம் ராஜராஜன் காலத்தில் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அதாவது ராஜராஜேஸ்வரத்திற்கு இலங்கை உட்பட விளிம்பு மண்டலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மானியங்கள் வந்திருக்கின்றன. படைகள் வந்திருக்கின்றன. என்றும் கூறி மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இருந்தது என்று' நொபுறு கரோஷிமா இதனை நிறுவ முயன்றுள்ளார்
.(நாளை தொடரும்)

No comments:

Post a Comment