Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 1

    எனது இக் கட்டுரை சோழர்கால ஆட்சி முறையும் சமூக அமைப்பும் பற்றிப் பேசுகிறது நீண்ட இக் கட்டுரையை ஐந்து பகுதிகளாகப் பிரித்து பதிவிடுகிறேன் ஆர்வமுடையோர் வாசிக்கலாம்.
    மௌனகுரு
    __________________________________________________________
    ஒரு கால கட்டத்தின் சமூக அமைப்பினை தெளிவாக அறிகின்ற போதுதான் அந்தக் கால கட்டத்தின் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையம் தெளிவாகவும் பூரணமாகவும் அறிந்து கொள்ள முடியும். துரதிஷ்டவசமாக தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் தமிழிலே மிகவும் குறைவு.
    __________________________________________________________
    . சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும்
    _____________________________________________________
    கி.பி 850 –கி.பி 1260 வரையுள்ள 460 வருட காலங்கள் தமிழ் நாட்டிலே சோழர்களின் ஆட்சி நிலவியுள்ளது. ஓர் அரச குலத்தினுடைய ஆட்சி தொடர்ச்சியாக நிலவுவது என்பது வரலாற்றில் ஒரு பெரிய விஷயம்
    . கி.பி 2ம் நூற்றாண்டிலே தஞ்சாவூர்ப்பகுதியில் ஒரு சிறு அரச குலமாக இருந்த சோழர் குலம் கி.பி 850ற்குப் பின்னர் தென்னிந்தியாவில் நடந்த அரசியல் மாற்றங்களினால் பேரரசானது.
    இவ்வரசகுலத்தின் பேரெழுச்சிக்கு அக்கால அரசியல் மாற்றமும் அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உருப்பெற்ற பொருளாதார சமூக மாற்றங்களும் காரணங்களாயின.
    தமிழகத்தின் வடக்குப் பகுதியினை கி.பி 6 ம் நூற்றாண்டு தொடக்கம் 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்களும், தென்பகுதியினை பாண்டியர்களும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டின் ஏகச்சக்கராதிபதிகள் யார் என்று இருவருக்குமிடையில் நடைபெற்ற போட்டியிலே ஒருவரை ஒருவர் அழிக்க இருவரும் நீண்ட கால ஆயத்தம் செய்தனர். திருப்புறம்பியத்திலே நடைபெற்ற பெரும் போர் தமிழகத்தின் எஜமானர்கள் யார் என்பதற்கு விடை கூறியது. இப்போரிலே பாண்டியர் தோற்றனர். பல்லவர் வென்றனர். ஆனால் வெற்றி பெற்ற பல்லவர்கள் போரில் ஏற்பட்ட இழப்புக் காரணமாக சோர்ந்து போயினர். இக்காலகட்டத்தில் பல்லவர் பக்கம் இருந்து போராடிய ஒரு சிறு குலமான சோழர்கள், பல்லவரின் போர்ச் சோர்வினைப் பயன்படுத்தி தஞ்சாவூரினைச் சுதந்திர அரசாகப் பிரகடனப்படுத்தினர். இதில் முக்கியமானவன் விஜயாலயச் சோழன்.
    தஞ்சாவூரினைத் தனி அரசாக்கி, சுதந்திர சோழ மண்டலமாகப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்து சோழரின் பொற்கால ஏடுகள் விரியத் தொடங்கின
    . இந்தக்காலகட்டம் கி.பி 850களை ஒட்டியதாகும்.
    கி.பி 850களில் ஆரம்பமான சோழ அரசு விஸ்தரிப்பு, அதனது நிர்வாகம், ஆட்சி என்பன 1260வரை செல்லுவதனைக் காணுகின்றோம்.
    தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய இந்தக் காலம் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி என்பர்.
    கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதிகள் யாவும் இக்காலப்பகுதிக்குள் முதன்முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசு ஒன்றின் கீழ் வந்தன.
    இப்பகுதிகள் யாவும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குடையின் கீழ் ஆளப்பட்டன.
    தமிழ் மாவட்டங்கள் மாத்திரமல்ல கங்கையும், கடாரமும,; கலிங்கமும், இலங்கையும் கூட இந்தப் பேரரசின் அங்கங்களாயின
    . தனக்கு கீழ்ப்பட்ட நாடுகளை மண்டலங்களாகப் பிரித்து மைய அரசாட்சி ஒன்றினை வைத்து, சோழப் பேரசு நீண்ட காலம் நிலைத்து நின்றது.
    இக்கால கட்டத்தினை தமிழர்களின் பொற்காலமாகக் கட்டமைக்கின்ற நிகழ்வுகளும் ஆராய்ச்சி உலகில் நிகழ்ந்துள்ளன
    .
    பேரசு ஒன்று நிறுவப்பட்டதுடன் பெரும் தத்துவமான சைவசித்தாந்தமும் இக்கால கட்டத்தின் பிற்பகுதியில் தோன்றுகின்றது
    . இதன் ஆரம்ப காலங்களில் காவியங்கள், சிற்றிலக்கியங்கள் இலக்கணநூல்கள் உரைநடை நூல்கள், தொகுப்பு நூல்கள் என்ற வகையில் இலக்கியம் கூட உன்னதமான நிலையில் இருந்த காலமாகச் சித்தரிக்கப்படுகின்றது
    .
    இக்காலகட்டத்தில் முதன்முறையாகப் பிரமாண்டமான அளவில் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.
    அரசர்களும் அரசைச் சார்ந்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கோயில்களைக் கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். தமிழர் வாழ்வில் கோயில் ஒரு முக்கிய இடமாக அமைந்ததுடன் தமிழர்களின் கலை பண்பாடு வாழ்க்கை முறை சமூக அமைப்பு என்பனவற்றிலும் கோயில் மிகப் பிரதானமான இடம் பெறத் தொடங்கியது
    .
    பல்லவர் காலத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக இத்தகைய கலாசார வளர்ச்சிப் போக்குகள் இடம் பெற்றன என்று இது சம்பந்தமாக ஆராய்ந்த அறிஞர் கூறுவர்
    . இத்தகைய மஹோன்னதமான நிகழ்வுகள் நடைபெற்ற காலத்திலே தான் கோயிலின் பின்னணியிலும், தமிழர்கள் என்ற உயர்வெண்ணத்தின் பின்னணியிலும் பல்வேறு அடக்கு முறைகளும் சுரண்டல்களும் நடந்தேறின.
    சோழர்களின் பொற்காலம் பற்றியும், இக்காலத்து கலைகளின் உன்னதம் பற்றியும் எழுதும் எமது வரலாற்று ஆசிரியர்கள், இக்காலகட்டத்தில் நடந்த கொடுமைகள் பற்றியோ, மறைக்கப்பட்ட கலை இலக்கியங்கள் பற்றியோ, அடக்கப்பட்ட மக்கள் பற்றியோ எதுவும் எழுதுவதில்லை
    . எனினும் அண்மைக்காலமாக இவ்விடயம் பற்றி பல ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
    ஒரு கால கட்டத்தின் சமூக அமைப்பினை தெளிவாக அறிகின்ற போதுதான் அந்தக் கால கட்டத்தின் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையம் தெளிவாகவும் பூரணமாகவும் அறிந்து கொள்ள முடியும். துரதிஷ்டவசமாக தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் தமிழிலே மிகவும் குறைவு.
    எனினும் மேற்கு நாட்டவர்களும் தமிழ் நாட்டவர்களும் இதுபற்றி ஆய்வுகள் செய்திருக்கின்றனர். ஆனால் அவை பரவலாக்கப்படவில்லை.
    சமூக அமைப்புப் பற்றி பேர்ட்டன் ஸ்ரைன், கத்தலின்கவ், கெயில் ஒம்பெத்,நொபுறு கரோஷிமா, போன்றோர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. இவர்களோடு கூட செண்பகலட்சுமி, எஸ்.மீனாட்சி, குணா, கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை, கேசவன், ராஜ் கௌதமன், அ.மாக்ஸ், மே.து.சு.ராஜ்குமார் போன்றோரின் ஆய்வுகளும் முக்கியமானவை.
    அதன் பின்னர் வந்த இளம் ஆராய்வாளர்களும் இத்துறையில் முயற்சிகள் செய்கின்றனர்.
    இவர்களுடைய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு சோழர் காலத்தின் சமூக அமைப்பினை முதலில் புரிந்து கொள்ள முயலுவோம்.
    சோழர்கால சமூக அமைப்பையும், சோழர் கால ஆட்சிமுறையினையம் புரிந்து கொள்ளும்போது அக்கால கலை இலக்கியங்கள் பற்றியும் நாங்கள் புரிந்து கொள்ள முடியும்
    ( நாளை தொடரும்
  • Maunaguru Sinniah Thank you Vimalathithare
  • Murugesu Natkunathayalan மிக நன்றாக இருக்கிறது. அரசியல் சமயம் கலை மூன்றும் ஒரு சேரப் பயணித்த காலமாக இருக்கிறது. தொடரட்டும்.
  • மாருதம் கலைக்கழகம் படையாண்டவெளி மிக்க சுவாரசியமாக இருக்கின்றது. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கின்றோம்.
  • Sivalingam Arumugam பொதுவாக சோழர்களின் ஆட்சி வீச்சு, வீரப்பிரதாபங்கள்பற்றி பேசப்படும் தமிழ் இலக்கிய ஆய்வுகளூடே அக்கால சமூகக் கட்டமைப்பும் அதன் இயல்புகளும் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளும் பற்றிச் சொல்ல விளைகிறீர்கள் என எண்ணுகிறேன். மிக்க எதிர்பார்ப்புடனான நன்றிகள்.
  • Maunaguru Sinniah மாருதம் கலைக் கழகத்தினருக்கு உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது.பரந்த வாசிப்புப்
    பயிற்சி உங்கள் பார்வையை மேலும் அகலிக்கும்.உங்கள் செயல்பாடுகளை முக நூல்
    மூலம்அறிகிறேன்.பாராட்டுக்கள்.
  • Maunaguru Sinniah க்க நன்றி நற்குணதயாளன் உங்கள் வாசிப்பு ஆர்வம் நானறிவேன் நன்றிகள்
  • Kaneshalingam Thirugnanam
    Write a comment...

No comments:

Post a Comment