Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 6

கட்டுரையின் இறுதிப் பகுதி
சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -6
________________________________________________________
மௌனகுரு
_______________________________________________________
ஒரு கால கட்டத்தின் சமூக அமைப்பினை தெளிவாக அறிகின்ற போதுதான் அந்தக் கால கட்டத்தின் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையம் தெளிவாகவும் பூரணமாகவும் அறிந்து கொள்ள முடியும். துரதிஷ்டவசமாக தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் தமிழிலே மிகவும் குறைவு.
___________________________________________________
மேற்குறிப்பிட்ட சோழர் கால சமூக அமைப்பிலிருந்தும் சோழர் கால அதிகார கட்டமைப்பிலிருந்தும் நாம் சோழர் கால சமூக கட்டமைப்பினால்
அங்கு நிலவிய தொழில் முறைமைகளையும்
சாதி முறைமைகளையும் வைத்துப்
பின்வருமாறு பிரிக்கலாம்.
சமூகத்தின் மேல் நிலையிலே அரசர்களும், அரசர்களைச் சார்ந்த அரச குடியினரும் இருந்தார்கள். இந்த அரச குடியினருக்கு உதவியாக மந்திரிகளாக, கல்வி கற்பிப்பவர்களாக பிராமணர்கள் இருந்தார்கள்.
அரசர்களுக்கு படை உதவி புரிபவர்களாக வேளாளர், நில உடமையாளர்கள் இருந்தார்கள்.
இந்த அரச, பிராமணர், வேளாளர் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு மேல் தட்டு வர்க்கமே மையத்திலுள்ள விளைநிலங்களை தங்களுடைய சொத்துக்களாக வைத்துக் கொண்டு மையத்திலிருந்து ஆட்சி செலுத்தியவர்களாகும்.
படைகளை வைத்துக் கொண்டு அரசர்களும், அரசர்களைச் சார்ந்தோரும் வேளாளர்களும் அதிகாரம் செலுத்தஅந்த அதிகாரத்தினை ஞாயப்படுத்துகின்ற தத்துவங்களையும் நூல்களையும் எழுதி இந்த அதிகாரத்தை மக்கள் ஏற்கும்படியாக செய்கின்ற பணியினை இந்த அறிவாளர்கள் செய்தார்கள்.
பிராமணர்களின் பங்கு இதற்கு முக்கியமாக இருந்தது.
முதலாம் ராஜராஜன் காலத்திலே நிறைய பிராமணர்கள் குடியேற்றப்பட்டார்கள்
வடநாட்டிலிருந்து பிராமணர்கள் இங்கே கொண்டு வரப்பட்டார்கள்
அவர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்ற சிறந்த விளை நிலங்கள் மையப்பகுதியிலே கொடுக்கப்பட்டன.
பிராமண கிராமங்கள் உருவாகியிருந்தன.
அதனை நடத்துவதற்கென பிராமணர்கள் கொண்ட சபைகள் உருவாக்கப்பட்டு தலைவர்களாகப் பிராமணர்கள் இருந்தார்கள்.
இந்த மையத்திலிருந்து பல நிலங்கள் படைத் தலைவர்களாக இருந்த வேளாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தன.
அந்த நிலங்களை வேளாண்வகை என்று அழைத்தார்கள்
இந்த வேளாண்வகை நிலங்களில் அடிமை வேலை செய்வதற்கென மையப்படுத்தப்பட்ட பகுதியின் தூரத்திலே சேரிப்புறத்திலே அடிமைகள் இருந்தார்கள்.
பள்ளர்கள்,பறையர்கள் என இவ்வுழைக்கும் மக்கள் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டனர்.
ஆனால் முழு சுக பாக்கியங்களையும் அனுபவித்தவர்கள் இந்த உழுவித்து உண்பித்தவர்களான வேளாளர்களே.
அதே நேரம் சோழர் காலத்திலிருந்த அரசர்களுக்கு படைத் தலைவர்களாகச் சென்ற பலர் இருந்திருக்கிறார்கள்.
அகமுடையார், பள்ளிகள், கள்ளர், மறவர்,போன்றவர்கள் படைகளில் இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சமூகப் பிரிவினர் படைத் தலமை தாங்கிச் சென்ற போது அரசன் அவர்களுக்கு நிலமானியங்கள் அளித்தான்.
இதன் காரணமாக கள்ளர், மறவர், அகமுடையார், இந்த மூவரும் தங்களை நிலவுடையாளர்களாக மாற்றி தாங்களும் வேளாளர்களோடு சமமானவர்கள் என்ற ஒரு கருத்துருவினை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
'கள்ளர், மறவர், கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆகினரே' என்கின்ற ஒரு கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது.
இவ்வண்ணமாக சமூகத்தின் அரச அதிகாரத்தின் மையப் பகுதியிலே அரசர்களும், அரசரைச் சார்ந்தோரும் அரச குடிகளும் பிராமணர்களும், வேளாளர் ஆகியோரும் அதிகாரம் படைபலமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அமைய ஏனையோர் இந்த நிலமானிய அமைப்பினை இயக்குகின்ற வகையில் பங்களிக்கின்ற குடிகளாக மாறினர்.
சமூகத்தின் இரண்டாவது நிலையில் இருந்தவர்கள் கைவினைஞர்கள் ஆவர்.
நீர்ப்பாசனத்தை நடத்துகின்ற கட்டிடங்கள் வாய்க்கால்களைக் கட்டவும் அரசர்களால் நிர்மாணிக்கப்ட்ட கோயில்களை, அரண்மனைகளைக் கட்டவும், பாதைகளைப் போடவும், ஆன சிற்பிகள் ஆச்சாரிகள் அதாவது கட்டிட நிர்மாணக்காரர்கள்,
விவசாயத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி பண்ணக் கூடிய கொல்லர்கள், தச்சர்கள், கற்தச்சர்கள் நகை வேலை செய்யக் கூடியவர்கள், உலோக வேலை செய்யக் கூடியவர்கள் என்று ஒரு தொழில் பரம்பரையினர் அடுத்த நிலையிலே முக்கியமாக இந்த சமூக அமைப்பிற்கு தேவைப்பட்டனர்.
அவர்களிடம் நிலங்கள் இருக்கவில்லை. நிலமானியம் நிலைப்பதற்கான உதவிகளை அவர்கள் செய்தனர்.
இந்த வகையிலே சமூகத்தின் இரண்டாவது படியாக அவர்கள் கருதப்பட்டனர்.
இந்த நிலங்களிலே உழுதுவதற்கும், பண்ணை வேலை செய்வதற்கும் என பறையர், பள்ளர் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்
இவர்களுக்கு இருப்பதற்கு நிலங்கள், விளைநிலங்கள், கொடுக்கப்படவில்லை
. விளைநிலங்களுக்கு தூரத்திலே இருந்த ஒரு சேரிப்புறத்திலே வசதியற்ற இடங்களில் இவர்கள் விடப்பட்டனர்.
இந்த எல்லோருக்கும் தொண்டு புரிவதற்கென, சேவை புரிவதற்கென வண்ணார், பறையர், அம்பட்டர், போன்ற சாதிகள் வகுக்கப்பட்டன.
கோயிலில் ஓதுவார்கள் கோயிலில் ஆடுபவர்கள், கோயிலில் வேலை செய்பவர்கள், என்று கோயிலுக்கென்று சில சாதியினர் வகுக்கப்ட்டனர்.
இவ்வண்ணமாக ஒரு உயர் நிலையில் இருந்து தாழ்நிலை வரைக்குமான ஒரு சாதி அமைப்பொன்று தமிழர்களிடையே உருவாகின்றது.
இந்த சாதியமைப்பினை கட்டிக்காக்கவும் சாதியமைப்பினை நிலைநிறுத்தவுமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் கலாசாரங்களையும் இந்தக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் பிரசாரம் செய்தன.
'ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே அந்தக் காலகட்டத்தின் ஆளும் கருத்துக்களாக விளங்குகின்றன. அதாவது சமூகத்தின் ஆளுகின்ற பொருளாதார சக்தியாக எந்த வர்க்கம் விளங்குகின்றதோ எந்த வர்க்கம் பொருள் உற்பத்தி சாதனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ அந்த வர்க்கத்தின் கட்டுப் பாட்டிலேயே சிந்தனைகளும் உற்பத்திச் சாதனங்களும் இருக்கின்றன.
அதனாலேயே இத்தகைய சிந்தனை உற்பத்திச் சாதனங்களில் பின்தங்கியவாக்ளாக இருப்பவர்களின் கருத்துக்கள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் கட்டப்பாட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.'
சோழர்காலத்தில் நிலவிய நிலமானிய அமைப்பின் ஆட்சி முறையிலும் சமூக அமைப்பிலும் பிராமணரும், வேளாளரும், நிலம் வைத்திருப்போரும், அரசரும், வணிகரும் ஆளும் வர்க்கமாக இருந்தனர்.
சோழர் காலத்தில் வணிக வர்க்கம் மேலெழும்புகிறது.அதற்கொரு விரிவான தளமும் இருந்தது

மணிகிராமம்,
வளஞ்சியர்,
சூஸகர்
ராஜராஜப் பெருநிரவையார்,
நானா தேச திசை ஆயிரத்து ஐநூற்று
எனப் பல பெயர்களில் வணிகச் சபைகள் இயங்கின.
நிலவுடமையாளரும் வணிகரும் பணப்பலமுடையோராயும்,
பிராமணர் கல்விப் பலம் உடையோராயம்,
அரசர் படைபலமுடையோராயும் இருந்தனர்.
செல்வமும் கல்வியும் வீரமும் இணைந்து அதிகாரம் செலுத்தின.
கல்வியும், செல்வமும்,வீரமும், தமக்குள் சமரசம் செய்து தம் கீழ் உள்ளோரை அடக்கி ஆண்டன.
அச்சமூக அமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலைத் தரும் தத்துவம் கலை, இலக்கியங்கள், பெருவாரியாக வளர இவ் ஆளும் வர்க்கம் பெருமூக்கமளித்தது.
சோழர் காலத்தில் வளர்க்கப்பட்ட வேதக்கல்வி, வேதக்கல்வியை வளர்த்து வடிவமைக்கப்பட்ட வேதப் பாடசாலைகள்
வேதக்கல்வியை வளர்க்கும் பிராமணர்கட்கு அளிக்கப்பட்ட பிரம்மதேயக் காணிகள், ஊர்கள்,
அரசர்களும் நிலப்பிரபுக்களும் போட்டி போட்டுக் கொண்டு எழுப்பிய கோயில்கள், மடங்கள், என்பனவும்,
அரசர்களைப் புகழ்ந்து எழுந்த உலா பரணி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களும்
சாதிப்பாகுபாட்டை மறைமகமாக நிலை நிறுத்தும் மதமும்
சோழர்காலத்தில் ஆளும் வர்க்கம் தமது கருத்தியலை உருவாக்க எடுத்த முயற்சிகளாகும்.
இக்காலகட்டத்தில் இடைநிலையிலிருந்த தொழிலாளத் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, மிக அடித்தள நிலையிலிருந்த உழைக்கும் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, அல்லது அவர்களது வழிபாட்டுமுறைகளோ, சமயச்சிந்தனைகளோ, வாழ்க்கை முறைகளோ,பண்பாடோ, சோழர் கால பெரும் கலை இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. அது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவமில்லை.
இவ்வகையில் சோழர்கால சமூக அமைப்பிற்கும் அக்கால தத்துவம் கலை, இலக்கியங்கட்குமான உறவு தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.
இந்த ஒரு அடக்குமுறையின்பின்னணியில் எதிர்ப்புக் குரல் தந்த மதங்களும் இருந்தன.வைஷ்ணவம் அதில் ஒன்று.அதிலும் இராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தென்கலை வைஷ்ணவ வழி வழிவந்த கம்பன் குரல் முக்கியமானது.
கம்பனின் குரல் அக்காலத்து மன்னார்களுக்கு எதிராக,அக்கால ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்தகலகக்குரல்.
நான் எழுதிய கம்பன் ஒரு கலகக் காரன்
எனும் கட்டுரையில் நான் இது பற்றி விளக்கியுளேன்.
சித்தர்களும் கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.
அதிகாரமும் அடக்கு முறையும் உள்ள
இடங்களில் அதனை மீறுதலும் கலகக் குரல்களும்
எழுதல் இயல்பு
.காலம் தோறும் இது நடை பெறுகிறது
முற்றும்

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பறையர்களின் வேலை என்ன? பள்ளர்கள் விவசாயம் என்றல் மள்ளர்கள் யாரு? இது எதுவுமே தெரியும் போஸ்ட் போடா வந்துட்டீங்க/

    ReplyDelete
  3. மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

    “"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்"”−- என்று திவாகர நிகண்டும்.

    ReplyDelete
  4. “"மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
    சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
    வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
    வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்"”−-தொல்காப்பியம்.


    திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.

    ReplyDelete
  5. விஜயநகர ஆட்சியில இருந்த கட்டமைப்பை சோழர் காலத்தோடு எப்படி ஒப்பிட முடியும்.

    ReplyDelete