Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 4

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர் - 4
__________________________________________________________________

புராதன தமிழர்.
தமிழ் நாட்டில் இப்போது வாழும் தமிழர்களை
மானிடவியல், நோக்கில்
ஆஸ்ரோலயிட், அல்லது நீக்ரோயிட்,
மங்கோலயிட் எனப் பிரிக்கி;ன்றனர்.
கறுப்புநிறம், இடைத்தர உயரம், தடித்த உதடு, சுருட்டை மயிர், கொண்டவர்கள் அஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இனத்தவர் எனவும்
, செம்புநிறம், உயரம், நீண்ட மயிர், மென்மையான உதடு கொண்டவர்கள் மங்கோலயிட் எனவும் பிரித்தனர்.
இவர்கள் அனைவரும் கலந்து பெருகி பல்கிய இனக் குழுமமே இன்று காணப்படும் தமிழ்ச் சமூகமாகும்.
இக்கலப்பில் பலவிதமான தோற்றப்பாடுகள் கொண்டவர்கள் தோன்றியிருக்க வேண்டும்.
பலியோதிக் காலத்திலும், மெசோலிதிக் காலத்திலும் ஆஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இன மக்களே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர்.
நாகரீகம் பெற்ற இரும்புப் பாவனை அறிந்த மங்கோலயிட்டுகளான திராவிடரின் வருகையுடன் நிலைத்த, ஒழுங்கான வாழ்க்கையுடைய சமூகம் இயங்க ஆரம்பிக்கின்றது.
பலியோதிக் காலத்திலும், நியோலிதிக் காலத்திலும் சங்க இலக்கியங்களிற் கூறப்படும் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் நிலமக்கள் வாழ்ந்தனர்.
இவர்களே தமிழ் நாட்டின் மிகப் பழைய மூதாதையர் ஆவர்.
இவர்கள் நாடோடி இனத்தவராகவும் இடம் பெயர்ந்து வாழ்பவர்களாகவும் இருந்தனர்.
இவர்களிற் சிலரை நாம் இலங்கை வேடர்களுடனும் ஒப்பிடலாம்.
வேடர் என்போர் வேட்டைத் தொழில் புரிபவர்கள்.
தென்னிந்தியாவின் சில பகுதிகளில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் மீனவர்களும் வாழ்ந்தனர்.
இன்று நீலகிரி மலைப்பகுதிகளில் ஒதுங்கி வாழும்
இருளர்,
தொதுவர்,
படகர்,
போன்றோரும்,
வேடர்,
மீனவர்,
குறவர்,
பறையர்,
போன்றோரும் தமிழ் நாட்டுப் பழங்குடிகளின் வழித்தோன்றல்களே.
பின்னாளில் வந்த மங்கோலயிட் இனக்குழுவினரான திராவிட மொழி பேசும் மக்கள் இவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ளாமையினால் இவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வெளித்தள்ளப்பட்ட சாதியினராகி விட்டனர்.
(பறையர் தமிழ் நாட்டில் தம்மை ஆதித்திராவிடர் என்றே அழைத்தனர்.)

திராவிடர் வருகை.
நியோலிதிக் காலத்தில் திராவிட மொழி பேசும் மக்களின் வருகை தமிழ் நாட்டில் நடந்தேறுகிறது.
இவர்கள, புதுப்பண்பாட்டைக் கொண்டு வருகிறது.
மட்பாண்டம்,
புதிய கருவிகள்,
தாய் வணக்கம்,
முருக வணக்கம்,
இறந்தவர்களைப் மட்பாண்டத்திற்குள் போட்டுப் புதைத்தல், ஆவியுலக நம்பிக்கை,
நெல் பயிரிடுதல்,
நீர்ப்பாசன முறை
போன்ற பல புதிய பண்பாடுகளை இவர்களே தமிழ் நாட்டுக்குக் கொணர்கின்றனர்.
இப்பண்பாட்டை மானிடவியலாளர்கள் பெருங்கற்காலப் பண்பாடு என்று அழைப்பர்.
ஆல்ச்சின் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்துள்ளார்
. ஜெர்மனியரான Jagoe 1876 இல் பாளையம் கோட்டைக்கு 12 மைல் தொலைவிலுள்ள தாமிரபருணி ஆற்றங்கரையிலிலமைந்த ஆதிச்ச நல்லூரில் செய்த அகழ்வாராய்ச்சி புதிய தகவல்களைத் தந்துள்ளது.
இப்பகுதியில்
புதை தாழிகளையும்,
கறுப்பு, சிவப்பு மட் பாண்டங்களையும்
பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய தடயங்களையும் இவர் கண்டு பிடித்தார்.
இவரைத் தொடர்ந்து Alexandra Rea,Louse Lapicque போன்றோர் 1899,1904 ஆண்டில் நடத்திய ஆராய்ச்சிகள் மேலும் பல தகவல்களைத் தந்தன.
இவர்கள் இங்கே மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடந்த சில பொருட்களைக் கண்டெடுத்தனர்.
அவற்றுள் ஒன்று தங்கத்திலான தலை வட்டமாகும்.
இதே போன்ற சாமான்கள் மைசினியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எட்கார் தேஸ்டன் கூற்றின்படி இத்தகைய தலைவட்டம் இறந்தவர்களுக்கு இட்டுப் புதைக்கப்படுவதாகும்
. ஆதிச்ச நல்லூரில் காணப்படும் புதைகுழிகள் மெகதிலிக் காலத்தை அப்படியே ஒட்டியதில்லை. பெரிய கற்கள் குழிகளைச் சுற்றிக் காணப்படாமை அதிலொன்று.
ஆதிச்ச நல்லூரில் கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. செம்பிலான மோதிரம,; வளையல்கள் என்பன கிடைக்கின்றன. தங்கத் தலைவட்டம், ஊதுகுழல் என்பன கிடைக்கின்றன. செம்பிலான வேல், சேவல், என்பன கிடைக்கின்றன. இதன் காரணமாக ஆதிச்ச நல்லூரில் முருக வணக்கம் இருந்தமை தெரிய வருகிறது.
(பழனியில் காவடி எடுத்துச் செல்கையில் ஊதப்படும் குழல் இதன் தொடர்ச்சியேயாகும்.)
புராதன மனிதர்களின் கலை முயற்சிகளை வெளிப்படுத்தும் குகை ஓவியங்களையும் புதை பொருளாய்வாளர் கண்டெடுத்துள்ளனர்.
சென்னை, பெங்களுர், சாலையில் அமைந்துள்ள பாகூர் கிராமத்தில் மலைக்குகையில் சில ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பல மனிதர்கள் இருவர் குதிரையில் சவாரி செய்வது போன்ற ஓவியம் அது.
அவை இயற்பண்பு சார்ந்ததாயில்லை. ஒரு மனிதன் கையில் வாளை உயர்த்திய படி சவாரி செய்வது போன்றும் ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகாமையில் உள்ள கீழ்க்கலை எனும் சிறு கிராமத்தில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல குழு மனிதர்களை அவை பிரதிபலிக்கின்றன.
சக்கரம், பல குறியீடுகள்
என்பன ஓவியத்தினருகிற் காணப்படுகின்றன
. இவை எழுத்துக்கள் அல்ல.
அவை குலக்குழுச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவ்வக் குலங்களைச் சேர்ந்த ஓவியர்கள் இவற்றை வரைந்திருக்கலாம்
ஆல்ச்சின் எனும் புதைபொருள் ஆராய்சசியாளர் இவ் ஓவியங்களை நியோலிதிக் காலத்துக்குரியன என்கிறார்.
இதை விட மதுரையிலுள்ள, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் புராதன ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
உருவங்களின் புறப்பகுதிகளே (Out line) இவற்றில் வரையப்பட்டுள்ளன.
இவை ஆயுதம் தாங்கிய மனிதர்களைக் காட்டுகின்றன.
குதிரை,
கடிவாளம்,
அதற்கான தோல் ஆடைகள்,
ஆயுதம், என்பன மெகதலிக் காலத்தை இவை சேர்ந்தன, என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மெகதலிக் காலத்திற்குரியவர்களும் பெருங்கற் பண்பாடெனும் புதிய பண்பாட்டைக் கொண்டவர்களும் மங்கோலாயிட் இனத்தினரும் திராவிட மொழி பேசுபவருமான நாகரிகம் வாய்ந்த திராவிடர் ஆற்றங்கரைகளிலும் வளமான நிலப்பகுதிகளிலும் குடியேறினர்.
இக்குடியேற்றத்தினை புராதன தமிழ் நாட்டு மக்கள் எதிர்த்துப் போரிட்டிருக்க வேண்டும்.
ஆனால் வலுவும், நாகரிகமும், ஒழுங்கும் மிக்க திராவிட மக்கள் அவர்களை வென்றனர்.
இவ்வெல்லுகை மூன்று விதமான தமிழ் மக்களைத் தமிழ் நாட்டில் உருவாக்கிற்று.

1. புராதன தமிழ் மக்கள்
2. திராவிடருடன் கலந்த உருவாகிய கலப்பின மக்கள்
3. திராவிட மக்கள்
இத்தகைய பிரிவே திராவிட மக்களிடையே தோன்றிய சாதிப்பாகுபாட்டிற்கும் சமூகவேறுபாட்டிற்கும் அடித்தளமாயிற்று.
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment