Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 8

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- -8
_________________________________________________________________
மௌனகுரு
பண்டைய மக்களின் பொருளாதார நிலையும், கருத்துக்களும்
-------------------------------------------------------------------------------------------------.
குறிஞ்சி (மலைப்பிரதேசம்), முல்லை (காட்டுப் பிரதேசம்) ஆகிய நிலங்களில் இனக் குழுச் சமூகமே வாழ்ந்தது.
இந்நில மக்கள், புராதன இனக் குழுச் சமூக மக்கள். குறிஞ்சி நிலமக்கள் வேட்டையாடினர்;;;
கிழந்து அகழ்ந்தனர்,
தேன் எடுத்தனர்.
ஒரு வகையில் உணவு தேடும் நிலையில் வாழ்ந்தனர்
. முல்லை நில மக்கள் ஆடு, மாடு மேய்த்தனர்
. சிறிய முறையில் விவசாயம் செய்தனர். (தானியம் விளைவித்தனர்.)
ஒரு வகையில் உணவு உற்பத்தி செய்யும் நிலையில் வாழ்ந்தனர்.

உணவு தேடும் நிலையிலிருந்து உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறுதல் ஒரு வளர்ச்சி நிலையாகும்.
குறிஞ்சி நிலத்து வேடுவர்களும், முல்லை நிலத்து ஆயர்களும் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ் மக்களே
.
குறிஞ்சி நிலமான மலைப்பகுதியில் வளர்ச்சி குறைவு. மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தின் வளர்ச்சி குறிஞ்சியை விடச் சற்று அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்கள் ஆடு, மாடுகளை வைத்திருந்தனர். குறிஞ்சி நில மக்களை விட வசதி பெற்றிருந்தனர்.
வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்களிடம் இருந்து, குறிஞ்சி நில மக்கள் விவசாயம் செய்யும் முறையைக் கற்றிருக்க வாய்ப்புண்டு.
இவ்வகையில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த புராதன இனக்குழுச் சமூகங்களிடையே விவசாய முறையும் இருந்தது.
ஆனால் அது வளர்ச்சி பெறாத விவசாய முறை.
இப் புராதன இனக்குழுவுக்கு பின்னாளில் வளர்ச்சி பெறப்போகின்ற நீர்ப்பாசன முறை தெரியாது.
அவர்கள் நீர்ப்பாசனத்தை நம்பியிராது மழையை மாத்திரமே நம்பியிருந்தனர்.
அவர்களின் விவசாயக் கருவிகள் மிகப் பழைமையானவையாகவிருந்தன.. (இரும்பு வராத காலம் அது)
அவர்களின் சாகுபடி முறை உற்பத்தித் திறன் குறைந்ததாக இருந்தது.
இவர்கள் இடம் விட்டு இடம் பெயரும் சாகுபடி முறையினையே மேற் கொண்டிருந்தனர்.
ஒரு இடத்தில் காட்டை வெட்டித் துப்பரவு செய்து, தினை அல்லது, வரகு விதைத்துப் பயன் எடுத்த பின்னர் மண்வளம் குறையும் எனக் கண்டு அடுத்த இடத்திற்குக் குடி பெயர்ந்து, அங்கு துப்பரவு செய்து சாகுபடி செய்தனர். இதனால் பண்டைய இனக்குழு விவசாயத்தில் ஒரு நாடோடித் தன்மைக் காணப்பட்டது.
இப்புராதன இனக்குழு மக்கள் குறிஞ்சி நிலத்திலே தினை விளைவிக்கிறார்கள்
. அது மழையை நம்பி விளையும்., அல்லது விளைவிக்கும் தினை
. இத்தினைப் புனம் காவல் காக்க ஊர்ப்பகுதிகளிலிருந்து பெண்கள் சென்றமையையும், அவர்களுடன் வேறு பெண்களும் (செவிலி, தோழி) சென்றமையையும், தினை விளைவித்தமையையும், குருவி ஓட்டியமையையும், அத் தினைப்புனத்தில் நடைபெற்ற காதல் நாடகங்களையும், தலைவன், தலைவி சந்திப்பையும் சங்க இலக்கியக் குறிஞ்சிப் பாடல்களில் காணுகிறோம்.
அந் நிலத்திற்குரிய ஒழுக்கமாகப் புணர்ச்சி ஒழுக்கம் கூறப்படுகிறது.
முல்லை நிலத்தில் வரகு முதலிய தானியங்களை விளைவிக்கிறார்கள். இங்கு களை கட்டலும் நடைபெற்றதாக நச்சினார்க்கினியார் கூறுகிறார்.
இங்கும் நீர்ப்பாசனம் இருக்கவில்லை. ஒரு வகையில் விவசாயத்தை நன்கு இன்னும் அறியாத புராதன மக்களின் புராதன விவசாய முறை
இது. ஆனால் குறிஞ்சி நில விவசாயத்தைவிடக் கூடியளவு பயன் தந்த விவசாயமாக இது இருந்திருக்க வேண்டும்.
இவ்விவசாய வசதிபெற்றோரிடம் இருந்து, வசதி குறைந்த குறிஞ்சி நில மக்கள் அவர்களின் ஆநிரைகளைக் கவர்ந்தனர். வேட்டையாடி மிருகம் கொல்வதை விட ஆநிரைகளைக் கவர்வது வேட்டுவருக்கு குறைந்த கஷ்டத்தையும், அதிக பயனையும் தந்தது. ஆநிரை கவர்தல் வெட்சி என்ற பெயரில் புறத்திணையில் பின்னாளில் ஒரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது. (கொள்ளை அன்று தீய ஒழுக்கமாகக் கொள்ளப்படவில்லை. போர் அன்றைய சமூகத்தில் ஓர் அவசியமான ஒழுக்கமாகக் கருதப்பட்டது.)
தம்மிடமிருந்த நிரைகளைக் குறிஞ்சியில் வாழ்ந்த வேடரான பகைவரிடமிருந்து பாதுகாக்க முல்லை நில மக்கள் செய்த பாதுகாப்புப் போர் வஞ்சி என்று புறத்திணையில் ஒரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது.
இந்த வேட்டுவரையும், ஆயரையும் நாம் பின்னாளில் கலித்தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் காணுகின்றோம்.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும், குன்றக் குரவையிலும் இப்பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வும், வழக்கும், ஆடலும், பாடலும் இளங்கோவடிகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கூறப்படும் போர் ஒழுக்கங்கள் தத்தம் பொருளாதார நலன்களைக் காப்பதாக அமைந்துள்ளது.
(உதாரணம்.) மாடு பிடித்தல் (குறிஞ்சி நிலம்.) வெட்சி.
மாட்டைக் காத்தல் (முல்லை நிலம்.) வஞ்சி.
இம் முல்லையும், குறிஞ்சியும் வேனிற் காலத்தில் (சித்திரை, பங்குனி) சூரிய வெளிச்சத்தால் பாலை நிலமாகும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இக்கால கட்டத்திலே பாலை நிலத்திற்கூடாகச் செல்லும் மக்களிடம் அவர்கள் கொண்டு செல்லும் பொருள்களைக் கொள்ளையடிக்க எயினர், மறவர் ஆகிய குறிஞ்சி நில மக்கள் நடத்தும் போர் வாகை என்று ஓரு போர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது.
புராதன தமிழ்ச் சமூகத்தில் ஆரம்பத்தில் கூட்டு வாழ்க்கை முறையே நிலவியது.
உள்ளோர், இல்லோர் என்ற பேதம் இருக்கவில்லை.
கிடைத்ததைப் பகிர்ந்து உண்டனர். அல்லது பட்டினி கிடந்தனர்.
உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டனர்;,
அலைந்தனர்.
உணவு தேடுதலில் கூட்டாக ஈடுபட்டனர்
. தலைவரும், வீரரும் இருந்து சமமாக உணவு உண்டனர், கள் அருந்தினர், இறைச்சி சாப்பிட்டனர், ஆடினர், பாடினர். அவர்களின் அன்றைய எளிய உணவு முறைகள் பற்றிய பாடல்கள் குறிஞ்சி பற்றிய சங்ககாலப் பாடல்களிற் காணப்படுகின்றன.
இப்புராதன இனக்குழுக்கள் மலைப் பகுதிகளிலும் (குறிஞ்சி), காட்டுப் பகுதிகளிலும் (முல்லை) வாழ்ந்தனர். இவர்களிடம் கூட்டு வாழ்க்கையே நிலவியிருக்க வேண்டும்.
கூட்டு வாழ்க்கையின் பிரதி பலிப்பே வீரன்( Hero) என்ற படிமமாகும்.
இனக்குழுவுக்குத் தலைமை தாங்கி அக்குழுவுக்குரிய உணவு, இடம், பாதுகாப்பு என்பனவற்றைத் தருபவனே வீரன் எனக் கருதப்பட்டான்.
இனக் குழுமத்தின் கூட்டு அதிகாரத்தையே collective power) வீரன் பிரதியீடு செய்தான்
. புறநானூற்றில் வரும் வீரர்கள் இவர்களே.
வீரன் உருவாக்கத்திற்கு முன்னர் இனக்குழுச் சமூகம் சமத்துவமுடையதாயிருந்தது
. அங்கு தாயே தலைவியாக ஏற்கப் பட்டிருந்தாள்.
வீரன், தலைவன் உருவாவது தமிழ்ச் சமூக வளர்ச்சியின் இரண்டாம் கட்டம் எனலாம்.
வீரன் உருவாக்கத்திற்கும் முல்லை நிலத்திற்குமிடையே உறவுண்டு.
முல்லை நிலத்தில் தனிச் சொத்துத் தோற்றம் பெறுகிறது. உரிமையாளனாக அவன் காட்சி தருகிறான்.
அவனுக்குப் பின்னால் அவன் சொத்து அவனது வாரிசுக்குப் போக வேண்டும்.
அதற்கு அவனுக்கு ஒரு மனைவி தேவை.
அம் மனைவி பிற ஆடவருடன் செல்லாது கற்பு நெறி பேண வேண்டும்.
அப்போது தான் தலைவனின் சொத்து அவனது மகனுக்குச் செல்லும்
. இவ்வகையில் முல்லை நிலத்தில் தலைவன் வரும் வரை காத்துக் கொண்டிருக்கும் கற்பு நெறி, சமுதாய விதியாகி விடுகிறது. (குறிஞ்சி நிலத்துக்குக் களவும், முல்லை நிலத்துக் கற்பும் ஏற்றிக் கூறுதல் தமிழ் மரபு. முல்லை சார்ந்த கற்பு.)
வீரனின் (ர்நசழ) தோற்றத்திற்கும், இனக் குழுச் சமூகத்தின் கலைப்புக்கும் உறவுண்டு.
வீரனின் தோற்றத்திற்கும், தனிச் சொத்துரிமைக்கும், கற்புக்கும் தொடர்புண்டு.
நாம் முன்னரே குறிப்பிட்ட இனக்குழு விவசாய முறையின் ஆரம்பத்திற்கும், அதனையொட்டி உருவான ஆரம்பகால வணிகத்திற்கும், வீரனின் தோற்றத்திற்குமிடையே உறவுண்டு.
இவை யாவற்றையும் சங்க இலக்கியத்தில் வரும் குறிஞ்சி, முல்லை சம்பந்தமான பாடல்களும், புறநானூற்றுப் பாடல்களும் பிரதி பலிக்கின்றன.
மருதநில நாகரிகமும், பொருளாதார வளர்ச்சியும்.
மருத நிலம் வளர்கையில் அங்கு ஒரு புது விவசாய முறை உருவாகி விடுகிறது.
அவர்கள் ஆற்றோரங்களில் விவசாயம் செய்தனர்.
காவேரி
, வைகை,
தென்பெண்ணை,
தாமிரபருணி,
பாலாறு
என்பன முக்கிய
ஆறுகளாயின.
முக்கியமாக காவேரி ஆற்றுப் படுகை வளம் மிக்கதாயிருந்தது
. இதனால் நீர்ப்பாசன முறையைக் கண்டு பிடித்தனர். மழையை மாத்திரம் நம்பியிராது ஆற்று நீரின் துணை கொண்டு எப்போதும் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். எப்போதும் விவசாயம் செய்தமையினால் இடம்விட்டு இடம் பெயரும் தன்மை இவர்களிடம் காணப்படவில்லை.
நிலைத்த வாழ்க்கை ஒன்று ஏற்பட்டது. கோட்டை, குடியிருப்பு என்பன கட்டி நிலைபதியாக வாழ்ந்தனர். இவ்வண்ணம் மருதநில நாகரிகம் உண்டாயிற்று.
மருதநிலம் வளர்ச்சி பெற்ற காலத்தில் இரண்டு பிரதான சமூகங்களைத் தமிழகத்திற் காண்கின்றோம்.
அ. பழைய முறையில் வேட்டையாடி, மந்தை மேய்த்து, மழையை நம்பி பழைய முறையில் விவசாயம் செய்து வாழ்ந்த இனக்குழுக்கள்.
ஆ. புதிய முறையில் நீர்ப்பாசனம் செய்து புதிய உற்பத்திக் கருவிகளைக் கையாண்டு சாகுபடி செய்து மிக அதிக பயன் பெற்றுச் செல்வம் பெறும் நிலவுடமைச் சமூகம்
.
புதிய நிலவுடமைச் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் உருப் பெறுவதற்கு இக்கால கட்டத்தில் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இரும்பு பெரும் உதவி புரிந்தது.
பழைய இனக் குழுக்களுக்கும், புதிய நிலவுடமையாளர்கட்குமிடையே முரண் உருவானது.
இத்தகைய முரணில் ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை அழித்தொழிக்கும் அல்லது உட்செரிக்கும்.
இவ்வழித்தொழிப்பிலும், உட்செரிப்பிலும் கடும் மோதலும், ஆயுதம் தாங்கிய கலவரங்களும் இருக்கும்.
புதிய விவசாய பழைய சமூகம், பழைய இனக்குழச் சமூகங்களை அழித்தே உருவாகின்றது. புதிய விவசாய மயமாக்கலுடன் மருத நிலத்தின் வளர்ச்சியுடன் வேந்தும் உருவாகின்றது. வேந்துருவாக்கத்துடன் வடநாட்லிருந்து தமிழகத்திற்கு வந்த பிராமணியமும் இணைந்திருந்தது. கலித்தொகையில் இதற்கு ஆதாரமுண்டு.
ஒரு பகுதியில் மலை அல்லது வெளி சார்ந்த புன் செய் நில மக்கள் வாழ்ந்தனர். (Hilly and dry land)இப்பகுதிகளில் தினை, வரகு, சாமை என்பன செய்யப்பட்டன.
முல்லை நில மக்கள் இங்கு வாழ்ந்தனர்.
இன்னொரு பகுதியில் தாழ்நிலைச் சமவெளி மக்கள் வாழ்ந்தனர். (டுழற டயனெ) இங்கு நெல்லு சாகுபடி செய்யப்பட்டது.
வளர்ச்சி பெற்ற மருத நில மக்கள் வளர்ச்சி பெறாத குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலமக்களை உட்செரிப்பதில் வெற்றிகளைக் கண்டனர்.
பேர்ட்டன் ஸ்ரைன் தென்னிந்தியாவில் உட்செரிப்பதில் இழுபறி அதிக காலம் நீடித்தது என்பர்.
இதற்கான காரணங்கள்.
அ. மலைத்தொடர்கள், புவியியல் தன்மைகள் காரணமாக பழங்குடியினை மருத நில மக்கள் இலகுவாகத் தாக்கியழிக்க முடியவில்லை.
ஆ. விவசாயச் சமூகத்திலிருந்து தம்மை முற்றாகப் பழங்குடியினர் துண்டித்துக் கொள்ளவில்லை. இரு பிரிவினருக்குமிடையே ஒரு அருகாமை இருந்து வந்தது.
இ. தாக்குதல்களுக்கு வாய்ப்பான சிதறுண்ட விவசாயச் குடியிருப்புகளாகவே அவை அமைந்திருந்நதன.
பாரியின் பறம்பு மலை மீது மூன்று தமிழ் வேந்தர்களும் படை எடுத்தமையையும், அப்பறம்பு மலை மன்னர்களின் முற்றுகைக்கு அடிபணியாது நின்றமையையும் இப் பின்னணியிலேதான் நோக்க வேண்டும்.
மேலாண்மைக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டமாகவே இது இருந்து வந்தது
. புறநானூற்றுப் போர்கள் பலவற்றை இதன் பின்னணியிற் பார்ப்பின் தெளிவு பிறக்கும்.
மருத நில மக்கள் இனக்குழுக்களை வென்று உட்செரித்து நிலைபேறாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவர்களின் நிறைவேற்றுக்காக, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துப் பொது ஆட்சி முறை நிலைநிறுத்துவதற்கான கருத்தியல் பின்னணி தேவைப்பட்டது.
இக்கால கட்டத்திலேதான் தமிழகத்தில் புத்த, சமண வருகை நிகழ்கிறது. றோம நாட்டுடன் தொடர்பு ஏற்படுகிறது. சங்க இலக்கியத்திற்கும் றோம வணிகத் தொடர்பு பிரதிபலிப்பதை அல்ச்சின் கண்டு கூறியுள்ளார். (நெடுநெல் வாடையில் றோம நாட்டுத் தொடர்புக்குச் சான்றுண்டு.)
இவற்றால் தமிழகத்துக்கு எழுத்து முறை அறிமுகமாகின்றது
புத்த, சமண வருகையினால் தமிழகத்துக்கு எழுத்து முறை வந்தது எனக் கூறும் ஐராதவதம் மகாதேவன் கி.மு 2ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டதை உறுதி செய்துள்ளார்
.
மயிலை சினி வேங்கட சாமியும் சங்ககால பிராமி கல்வெட்டுக்கள் பற்றிக் கூறியுள்ளார். (பிராமி எழுத்துக்கள் வருமுன் தமிழில் எழுத்துக்கள் இருந்ததா? இல்லையா? என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது.)
எழுத்துக்களின் வருகையும், வேந்துருவாக்கவும் அரசியல் தேவையும் இணைந்த பொழுதுதான் பழைய பாடல்களைத் தொகுக்கும் வேலைகளும் ஆரம்பமாயின. சங்க இலக்கியப் பாடல்களில் மூன்று பிரிவுகள் உள்ளது போற் தோன்றுகின்றன.
அ. நினைவிலிருந்த பழைய பாடல்களை எழுத்தில் வடித்தமை.
ஆ. பழைய பாடல்களைப் போன்ற இனநினைவுகளைப் பாடல்களாகப் பாடியமை.
இ. தம் காலத்தைப் பிரதிபலிக்கும் புதிய பாடல்கள் யாத்தமை.
இத் தொகுப்பு முயற்சியின் போது தான் பழைய இனக் குழு மக்களின் வாழ்க்கை முறை கூறும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் பற்றிய பாடல்களும், அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற மருத நில மக்கள் பற்றிய பாடல்களும் தொகுக்கப்படுகின்றன.
தொகுப்புக்கு ஏற்கனவே நாம் கூறியபடி ஒரு நோக்கமுண்டு. அந்நூல்களைத் தொகுக்க உதவி புரிந்தோர் அக்காலத்து அதிகார, பலம் பெற்றோர், ஆட்சியாளர், தொகுப்பித்தோர்கள், அவர்களது தயவில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள்.
சமாந்திரமற்ற வளர்ச்சி.
___________________________________
மருதநிலம் வளர்ச்சி பெற்று அரசுகள் தோன்றி செழிப்பு வாய்ந்த வாழ்வினை தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர் வாழ ஆரம்பித்த அக்கால கட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்நிலை இருக்கவில்லை. இவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட அல்லது கவனிக்காது விடப்பட்ட ஏனைய நிலங்கள் வளர்ச்சியற்று இருந்தன.
, வளர்ந்த செழிப்பான நிலம் நோக்கி பிற மதத்தினரும், பிற நாட்டினரும் பிராமணர்களும், கைவினைஞர்களும் வருதல் இயல்பு. அவர்களின் வருகை மருத நிலத்தை மேலும் வளரச் செய்தது. ஏனைய நிலங்கள் இன்னும் தாழ்ந்தன.
இவ்வகையில் இப்பரிணாம வளர்ச்சிப் போக்கில் ஏனைய நிலங்கள் வளர்ச்சி குன்றின. இவ்வகையில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு சமாந்திர வளர்ச்சியின்மையினைக் (ருநெஎநn னுநஎநடழிஅநவெ) காணுகிறோம்.
சிறுபாணாற்றுப்படை இதனைத் தெளிவாகக் கூறுகிறது. பாணன் பாட்டுடைத் தலைவனைச் சந்திக்கச் செல்லும் வழியினை ஆற்றுப்படுத்தும் இச்செய்யுளில் கீழ்வரும் தரவுகள் தமிழ்ச் சமூகத்தின் சமாந்திரமற்ற வளர்ச்சியினை எமக்குக் காட்டும்.
143 _ 163 வரிகள் - எயிற்பட்டிமை.
164 _ 177 வரிகள் - வெல்லூர்.
178 _ 195 வரிகள் - நன்னன்மலை.
46 _ 92 வரிகள் - காஞ்சி.
147 _ 196 - கணவாய். மாடு மேய்ப்போர் வாழும் இடம்.
196 _ 192 - (நீர்ப்பாசனம் குறைந்த அளவில் உள்ள இடம்.)
213 _ 283; - உள் ஊர் மீனவர். குளத்தில் மீன் பிடிப்போர் வாழும் இடம்.
284 _ 351; - கடற்கரைப் பட்டினம். நீர்பாயும் இடம்.
371 _ 392; - திருவேக்கா.
மருதநிலம் உருவாகிவிட்ட காலத்தில் இத்தகைய சமனற்ற மாநிலங்கள் தமிழ் நாட்டில் இருந்தமையை சிறுபாணராற்றுப்படை காட்டுகிறது.
புவியியல் ரீதியாக மாத்திரமின்றிப் பொருளியல் ரீதியாகவும் தமிழ் நாடு சமனற்ற வளர்ச்சி கொண்டதாகவே இருந்தது.
புவியியல் ரீதியாக 4 நிலங்களே தமிழகத்தில் முன்பு இருந்தன
இவற்றைத் தொல்காப்பியர் பின்வருமாறு கூறுகிறார்.
காடுறை உலகம் (காட்டுப்பகுதி)
மைவரை உலகம் (மலைப்பகுதி)
தீம்புனல் உலகம் (வயற்பகுதி)
பெருமணல் உலகம் (கடற்கரைப்பகுதி)
என்று இந்தப் புவியியல் பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு உலகம் என்று தொல்காப்பியர் அழைப்பது கவனத்திற்குரியது. அவருக்குத் தமிழ்நாடு ஒன்று அன்று, பலது. தமிழர் ஒருவர் அன்று பலர்.
பாலை நிலம் பின்னால் வந்தது என்பது முன்னரேயே கூறப்பட்டது. இளம்பூரணர் பாலைக்குத் தனி நிலப்பகுதி இல்லை என்கிறார். சங்க இலக்கியங்களில் பாலைக்குக் குறிஞ்சி நிலப் பின்னணி தரப்பட்டுள்ளது.
பெரும்பாணாற்றுப்படையில் வேட்டையாடுவோரின் குடும்பம் விபரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எயினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எயினர் பாலை நில மக்கள்.
முல்லை நிலத்து ஆயர்களும்,
குறிஞ்சி நிலத்து வேட்டுவர்களும் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ் மக்களே.
குறிஞ்சி நிலமான மலைப் பகுதியில் வளர்ச்சி குறைவு. மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தின் வளர்ச்சி குறிஞ்சியை விட சற்று அதிகமாக இருந்தது. வளர்ச்சி பெற்ற மேய்ச்சல் (முல்லை) மக்கள் ஆடு, மாடுகளை வைத்திருந்தனர். குறிஞ்சி நில மக்களைவிட வசதி பெற்றிருந்தனர். இவ்வசதி பெற்றோரிடமிருந்து வசதி குறைந்த குறிஞ்சி நில மக்கள் ஆநிரைகளைக் கவர்ந்தனர். ஆநிரைகளைக் கவர்தல் அக்காலத்தில் வெட்சி என்று புறத்திணையில் அழைக்கப்பட்டது.
தம்மிடமிருந்த ஆநிரைகளை குறிஞ்சியில் வாழ்ந்த வேடரான பகைவரிடமிருந்து பாதுகாக்க முல்லை நில மக்கள் செய்த பாதுகாப்புப் போர் வஞ்சி என்று புறத்திணையில் அழைக்கப்பட்டது
.
இந்த வேட்டுவரையும், ஆயரையும் நாம் பின்னாளில் கலித்தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் காணுகிறோம்.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிலும், குன்றக் குரவையிலும் இப் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வும் வழக்கும், ஆடலும், பாடலும் இளங்கோவடிகளால் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
வளர்ச்சி பெற்ற மேய்ச்சல் நிலமான முல்லை நிலத்தை விட நீர்ப்பாசன வசதி பெற்ற மருதநிலம் மிக அதிக வளர்ச்சி பெற்ற நிலமாக இருந்தது.
மருத நிலத்தில் ஓடிய ஆறுகள் முன் கூறியது போல அதற்கு வளர்ச்சியைத் தந்தன. நிலம் விளைந்தது. நெல் மிகுந்தது. வாணிபம் பெருகிற்று. செல்வம் மலிந்தது. இச் செல்வத்தைக் கட்டிக் காக்க படைகளும், அரசும், கோட்டை கொத்தளங்களும் வேண்டியிருந்தன. எனவே தான் மருதத்தில் நடக்கும் போரினை புறத்திணையில்உழிஞை என்று அழைக்கும் மரபு தோன்றிற்று.
உழிஞை என்பது காவற்காட்டை அழித்து முன்னேறி கோட்டையைப் பிடிக்கும் போர். புறத்திணை வெண்பாவில் இது பற்றிய விபரங்களுண்டு.
அரசு வளர்ச்சி பெற்றுப் போர் முறைகளும் வளர்ந்த பின் திட்டமிட்டு வியூகம் அமைத்துச் சண்டை செய்யும் போர் நுணுக்கங்கள் தோன்றின. அதற்கு மிக அகன்ற நிலம் தேவைப்பட்டது. கடற்கரை அதற்குப் பொருத்தமாக அமைந்தது. இதனால் களம் குறித்து போர் செய்யும் இடமாகக் கடற்கரை அமைந்தது. அப்போர் தும்பை என அழைக்கப்பட்டது.
புறத்திணையிற் கூறப்படும் போர் முறைகள் ஒவ்வொருவரும் தத்தம் பொருளாதார நலன்களைக் காப்பதாக அமைந்துள்ளது.
உதாரணம்.
மாடு பிடித்தல் (குறிஞ்சி நிலம்) வெட்சி.
மாட்டைக் காத்தல் (முல்லை நிலம்) வஞ்சி.
அரணமைத்தல். (மருதநிலம்.) உழிஞை.
களம் அமைத்துச் சண்டை (நெய்தல்) தும்பை.
முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் சூரிய வெளிச்சம் காரணமாகவும், காலநிலை காரணமாகவும் பாலையாக மாறும் என்று முன்னர் கூறப்பட்டுள்ளது.
இக்கால கட்டத்திலே பாலை நிலத்திற்கூடாகச் செல்லும் மக்களிடம் கொள்ளையடிக்க எயினர், மறவர் ஆகிய குறிஞ்சி, முல்லை நில மக்கள் நடத்தும் போர் வாகை என்று அழைக்கப்பட்டது.
இவ்வண்ணம் ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு சமூக அமைப்பை, வாழ்க்கை முறையினை, வழிபாட்டினை, போர் முறைகளை வைத்திருந்தனர். எனவே தான் தொல்காப்பியர் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு உலகம் என்று அழைத்தனர்.
திணைக் கோட்பாடு புராதன தமிழர் வாழ்வை, சமூக அமைப்பை அறிய உதவும் திறவுகோல் என்பார். கா.சிவத்தம்பி
திணை என்பதற்கு அர்த்தம் என்ன?
____________________________________
திணை என்றால் என்ன என்று தொல்காப்பியர் வரைவிலக்கணம் தரவில்லை
. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு உயர்ந்த குடி, உயர்வு அல்லாத குடி என்ற அர்த்தத்திலேயே வழங்கப்பட்டது.
நச்சினார்க்கினியர் ஆரம்பத்தில் திணையினை நிலமாகக் கொண்டார். பின்னால் அதனை ஒரு குழுவுக்குரிய பெயராகக் காண்கிறார்
. திணை நிலைப் பெயரிலிருந்து திணை என்ற சொல் ஒரு குழுவைக் குறித்தது என்று அறிகிறோம்.
மருத நிலத்தின் வளர்ச்சியுடன் தமிழ் நாட்டில் மெகதலிக் காலம் ஆரம்பமாகிறது.
இரும்புப் பாவனை அதில் ஒன்று
எலியட் அவர்கள் போனீசியர் ஐரோப்பாவுக்கு இரும்பை அறிமுகம் செய்தது கி.மு. 800 இல் என்பர்.
ஹைமண்டோவ் திராவிட மெகதலிக் கலாசாரத்தை உருவாக்கிய திராவிட மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது. கி.மு. 500 இல் என்பர்
. இவர்கள் மத்திய தரைக் கடற்பகுதியைச் சார்ந்தவர்கள் என்பர் ஹைமன்டோவ்
. இவ்விடப்பெயர்வு
கி.மு. 322 – 500 க்கும் இடையில் நடந்திருக்கலாம் என்பர்.கோடன்.
இரும்புப் பாவனையுடன் திராவிட கலாசாரம் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கிறது.
இரும்பு ஆயுதங்கள் காட்டை அழிக்கப் பயன்படுகிறன்றன
. கற்கால மனிதனும், புராதன தமிழர்களும் முல்லையிலும், குறிஞ்சியிலும் வாழ்ந்தார்கள்.
மருதநிலத்தின் உடமையாளர்களாகத் திராவிடர் மாறியதும்
பண்டைய தமிழர் பலர் குறிஞ்சியில், ஒதுங்கிவிடச்
சிலர் திராவிடருடன் இணைந்திருக்கவும் வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியும், வேந்துருவாக்கமும்.
முல்லை நிலம் விவசாயத்திற்குரிய நிலமாக்கப்பட்டது.
முல்லை மருதமானது.
முல்லை நிலத்தவர்கள் விவசாயிகளானார்கள்.
முல்லையில் குடியேற்றங்கள நிகழ்ந்தன
. நிலைபதியான வாழ்க்கை ஏற்பட்டது.
விவசாயம் குடியிருப்புக்களை வேண்டி நின்றது.
அதிகளவு குடியிருப்புக்கள் ஏற்பட்டன.
விவசாய விளைச்சல்களைச் சேமித்து வைக்கும் முறைகள் தோன்றின
. ஆயர்கள் அரசர்களானார்கள்.
இதன் விளைவாக மன்னன் தோற்றம் பெறுகிறான்
. குறிஞ்சியில் தலைவன் கிழவன் என்றழைக்கப்பட,
முல்லையிலே மன்னன் என்றழைக்கப்படுகிறான்
. முல்லை மருதமாகிய பொழுது தலைவன் அரசன் என்ற பெயர் பெறுகிறான்.
மருத நிலத் தலைவன் ஏனைய நிலங்களையும் வென்று பேரரசனாகின்ற பொமுது வேந்தன் என்ற பெயரும் பெறுகிறான்.
கிழவன் (குறிஞ்சி),
மன்னன் (முல்லை),
(மருதம்), வேந்தன் (பெருநிலப்பரப்பு)
என்ற பெயர்களின் வளர்ச்சிப்படி முறைகள் ஒன்றினின்று ஒன்று வளர்ந்த முறைமையைக் காட்டுகின்றன
. அரசனுக்குரிய கடமைகளுள் ஒன்று விவசாய விளைநிலங்கள் அமைந்த நாட்டின் எல்லைகளை மீறிப் பகைவர் வராமல் பாதுகாத்தல் ஆகும்
.இம்மன்னர்களின் அரசுரிமை அவர்களின் திறமை, வீரம், செல்வம் என்ற அடிப்படையில் உருவாகின்றது.
புறநானூற்றிலே
18 சேர மன்னர்களும்,
13 சோழ மன்னர்களும்
, 12 பாண்டிய மன்னர்களும்
, 47 தலைவர்களுமாக
90 மன்னர் பெயர்கள் வருகின்றன.
இவர்களுள் வேளிர்கள் சிறு நிலப்பகுதியை ஆண்டவர்கள்.
ஒதுக்கமான காவலரண் உள்ள பகுதியில் இவர்கள் இருந்தார்கள்.
மூவேந்தர்கள் ஆற்றுப்படுக்கை நிலங்களில்
உள்ள தலை நகரங்களில் இருந்து ஆட்சி புரிந்தார்கள்.
தமிழர்களிடையே ஆதிகாலத்தில் அரசுருவான
முறைமையை கா. சிவத்தம்பி தனதுThe development of aristocrasy in ancient Tamil Nadu என் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
அரசின்மையிலிருந்து அரசுருவாக்கம் ஏற்பட்டு
அரசு நிலை பெற்றமையை
அதாவது அரசின்மை,
அரசுருவாக்கம்,
அரச நிலைபேறு
என்பவற்றை இலக்கிய ஆதார மூலம் அவர் நிறுவுகிறார்.
திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு
தலைவன்
, இறை
, கோ,
மன்னன்,
வேந்து,
வேந்தன்,
அரசு,
அரசன்,
குரிசில்
, கொற்றம்
என்ற சொற்களுக்கூடாக வரலாற்றில் பின்நோக்கிச் சென்று
இப் படிமுறை வளர்ச்சியை அவர் நிறுவுகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசின்மை, அரசுருவாக்கம், அரசு நிலைபெற்றமை என்பன அவ்வக்காலச் சமூக பொருளாதார நிலைமைகளின் விளைவாகவே அமைந்துள்ளன.
வள்ளுவர் அரசுக்குப்
படை,
குடி,
கூழ்,
அமைச்சு,
நட்பு,
அரண்
என்பன இருக்க வேண்டுமென்று திட்டமாகக் கூறுகிறார்
. மிகுந்த வளர்ச்சி அடைந்த அரசின் தன்மை இது.
இத்தகைய அரச அங்கங்களை உடையோரே வேந்தர்கள் எனக் கருதப்பட்டனர்.
வேந்துருவாக்கத்திற்கு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக அதிகாரம் பெற்ற வேளாளர் (நிலவுடமையாளர்)
, கலத்திலும்,, காலிலும் சென்று வாணிபம் செய்து பொருளீட்டி பொருளாதார பலம் பெற்ற வணிகர்கள்.
அறிவில் அதிகாரம் கொண்டு மேனிலை பெற்ற பிராமணர்கள்
ஆகிய சமூகங்களின் உருவாக்கங்களும் உதவுகின்றன.
அரச நிலைபேற்றுக்கு
பிராமணிய,
பௌத்த
கருத்தியல்களும் உதவுகின்றன.
வேந்துருவாக்கமும்,
புதிய சமூகமாக விவசாய சமூகம் உருவாகியமையும்
, தமிழரை நாகரிகத்தின் வளர்ச்சியின்
ஆரம்ப நிலைக்குக் கொண்டு வருகின்றது.
விவசாய சமூக உருவாக்கத்துடன் தமிழரிடையே சமூக வேறுபாடுகளும், சாதி வேறுபாடுகளும் தோன்றி விடுகின்றன. ஆரம்பத்தில் நிலங்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் பின்னர் ஒவ்வொரு நிலத்திலும் தொழில் அடிப்படையிலும் ஏற்படலாயிற்று.
மேற்குறிப்பிட்ட தகவல்களின் பின்னணியில்
திராவிடர் வருகைக்கு முற்பட்ட தமிழகத்தினைக் கட்டமைக்க முயல்வோர்
காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலையிலிருந்து
மருத நில நாகரிக நிலைக்கு தமிழ் மக்கள் வந்தமையை
முன்னர் கூறிய தகவல்கள் மூலம் அறியலாம்.
இந்த நிலைகளைக் கடந்து வர தமிழ் நாட்டில் குறிஞ்சியிலும்,
முல்லையிலும் பின்னாளில் மருதத்திலும்
வாழ்ந்த மக்களிடையே ஓயாத போர்கள் நடைபெற்றன.
இனக் குழுத் தலைவர்கள் வீரர்களாயினர்
. மார்பில் வேல் தாங்கி இறத்தல்
, போரில் புறமுதுகிடாமை,
விழுப்புண் தாங்குதல்,
தலைவனுக்காகத் தன்னுயிர் நீத்தல்,
சிறு பையனைப் போருக்கு அனுப்புதல்,
வீர மக்களைப் பெறுதல் என்று
போரே வாழ்வின் பிரதான அம்சமாக அமைந்தது.
வீரம் போற்றப்பட்ட இந்த காலகட்டம் வீரயுகம் என்றழைக்கப்படுகிறது.
ஓயாத இந்தப் போர்களுக்கூடாகவே
ஆரம்பகால நிலவுடமை தோற்றம் பெறுகிறது.
நிலத்தைச் சாகுபடி செய்யும் உழவர் தோன்றுகின்றனர்.
இவற்றைப் பாதுகாக்கக் குறு நில மன்னரான வேளிர்கள் தோற்றம் பெறுகின்றனர்.
வேளாண்மைச் செய்கை வாழ்வோடு இணைகிறது.
உற்பத்தி காரணமாக ஏற்பட்ட உயர்வும்,
கைத்தொழில்களும் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வியாபாரம் செய்யும் வணிக சமூகத்தையும் உருவாக்கி விடுகிறது.
இவ்வண்ணமாக வீரயுகம் (Heroic age)
ஆரம்ப கால நிலவுடமையுகம், (Early feudal age)
ஆரம்பகால வணிக யுகம் (Early mercantile age) என்ற யுகங்களினூடாக நாகரிக நிலைக்குள் புராதன தமிழர் சமூகம் காலடி எடுத்துவைக்கிறது.
உலகின் சகல இன மக்களும் இந்த வரலாற்று விதிமுறைகளுக்கு இயையவே ஆரம்பகாலத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.
உலக சரித்திர ஆய்வு இதனையே காட்டுகிறது
. தமிழ் மக்களும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளமைக்குச்
சங்க இலக்கியம் எனப்படும் இலக்கியங்களிலேயே சான்றுகளுள்ளன.
அச் சான்றுகள் தொல்லியல் ஆய்வுகளாலும் உறுதி செய்யப்படுகின்றன.
சங்க காலத் தமிழகம் என அழைக்கப்பட்ட தமிழகம் பற்றிய புதிய கட்டமைப்பு ஒன்றைச் செய்யவும் முடிகிறது.
(கட்டுரைத் தொடர் முடிந்தது)

No comments:

Post a Comment