Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 7

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- -7
_________________________________________________________________
சங்ககாலம் பற்றிய கருத்து.
1. ஐந்து நிலங்களாக பிரித்து ஜந்து வகை ஒழுக்கங்களை ஓம்பித் தமிழர் வாழ்ந்த காலமிது.
2. தமிழர்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு சமத்துவமாக வாழ்ந்த காலம் இது.
3. சான்றோர்கள் வாழ்ந்த காலம் இது.
4. வீரமும் காதலும் வாழ்க்கையை நிறைத்திருந்த காலம் அது.
5. சோழ, சேர பாண்டியத் தமிழ் மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்டதுடன் தமிழ் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்த காலம் அது.
. தமிழர்கள் பிற நாட்டார் தலையீடின்றி சமத்துவமாக சந்தோஷமாக, காதல் புரிந்து, வீரச் செயல்களைப் புரிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த புராதன காலம் என்றும் ஒரு வகையில் அது ஒரு பொற் காலம் என்றும் கருத்துருவம் ஒன்று இவற்றை வைத்துக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.
சங்க இலக்கியங்களை உ.வே.சாமிநாதையரும் ஏனையவர்களும் கண்டெடுத்து பதிப்பித்த பின்னர் அவை அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசியற் சூழலில் இத்தகைய கட்டமைப்பு உருவானது.
சங்க இலக்கியத்தினை ஆதாரமாக் கொண்டு தொல்காப்பியர் வகுத்த திணைக் கோட்பாடு சங்க காலத்தை விளங்க எமக்குக் கிடைக்கும் முக்கியமானதொரு திறவு கோலாகும்.
இத்திணைக் கோட்பாட்டுக்குத் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர், நச்சினார்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தம் காலச் சிந்தனைப் போக்கிற்கும் தம் உலக அறிவு அனுபவங்களுக்கும் ஏற்ப விளக்கம் அளிக்க முனைந்துள்ளனர்
. அவர்களின் விளக்கங்களை அடியொற்றி எழுந்த ஒரு வகை விளக்கமே நாம் முன்னர் குறிப்பிட்ட ஒரு வகைக் கருத்தியற் கட்டமைப்பாகும்.
இக் கட்டமைப்புக்கு மாறான கருத்துக்கள் 20ம் நூற்றாண்டில் எழத் தொடங்கின
. வளர்ச்சி பெற்று வந்த
அகழ்வாராய்ச்சியியல்,
சரித்திரவியல்
மானிடவியல்,
அரசியல்,
பொருளியல்
, நாணயவியல்,
சமூகவியல்,
போன்ற பல்துறைகளின் பின்னணியில் தமிழ் ஆய்வியலும் நடைபெறலாயிற்று.
இதனால் இத்துறைகளில் பயிற்சியும், ஓரளவு புலமையும் கொண்ட தமிழ் ஆராய்வாளர் திணைக் கோட்பாடுகளுக்கு வேறு விளக்கம் தந்தனர்.
சங்க காலம் பற்றிய கருத்துக் கட்டமைப்பு
பற்றி எழுந்த விமர்சனங்களும், விமர்சகர்களும்.
__________________________________________________
பண்டிதர் இராக வையங்கார்
P.T ஸ்ரீனிவாசஐயங்கார்,
ராமச்சந்திரதீஷிதர்,
கமில்ஸ்லபில் ,
தனிநாயக அடிகள்
, சிங்காரவேலு
, N.சுப்பிரமணியம்
கா.சிவத்தம்பி
,
கைலாசபதி
முதலான தமிழ் அறிஞர்கள் சங்ககாலம் பற்றிய பழைய கட்டமைப்புக்கு மாறான கருத்துக்களை வைத்துள்ளனர்.
பின்னாளில் தமிழ் வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆய்வு செய்த பேர்ட்டன் ஸ்ரெயின் போன்றோரும் இன்று ஆய்வு செய்யும் செண்பகலக்சுமி, சுப்பராயலு, நொபுறு கறோசிமா போன்றோரும் ஏனைய இளம் ஆய்வாளரும் வித்தியாசமான கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
பண்டிதர் இராக வையங்கார்
“ பொருளதிகார ஆராய்ச்சி” எனும் நூலில் சங்ககால மக்களின் நடத்தைக்கும் பிரதேசத்திற்குமிடையே இருந்த தொடர்பை வெளிப்படுத்த முயற்சி எடுத்துள்ளார்.
P.T. ஸ்ரீனிவாசஐயங்கர்,
History of Tamils up to 600 A.Dயு எனும் நூலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்கின்ற திணைகளை நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி என விளக்கம் தந்துள்ளார்.
குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழர் முல்லையில் மந்தை மேய்ப்பவராக மாறி நிலைத்த வாழ்க்கை பெற்று நெய்தலில் கடல்கடந்து வியாபாரம் செய்பவராக வளர்ந்தனர் என்பது இவர் விளக்கம்.
ராமச்சந்திர தீஷிதர்
தமது Studies in Tamil Literature and History என்னும் நூலில் புரதான கால மனித வாழ்க்கையின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்ற ஐந்து வித்தியாசமான படிமுறைகள் இவை என்று விளக்கம் தந்துள்ளார்.
கமில் சுவலபில்
Tamil poetry 2000 years ago எனும் தமது நூலில் திராவிடருக்கு முந்திய தமிழரின் மூதாதையர் மலைப்பகுதியிலிருந்து செழிப்பு வாய்ந்த நிலப்பகுதிகட்கும், கடற்கரைப்பகுதிக்கும,; மலைப் பகுதிகளிலிருந்தும் காட்டுப் பகுதிகளிலிருந்தும் சரித்திரபூர்வமாகச் செய்த இடப் பெயர்வு என்று இதனைக் கூறியுள்ளார்.
நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த புராதன வேட்டைக்காரத் தமிழர்கள் இடைநிலையிலிருந்தும் மந்தை மேய்ப்பைத் தாண்டி உழப்பட்ட நிலத்தையும் மீன்பிடிப் பகுதியையும் நோக்கி பரிணாமம் பெற்றனர் என்று கூறுகிறார்.
தனிநாயக அடிகள்
தமது Landscap and poetry எனும் நூலில் ஐந்திணை பற்றிக் குறிப்பிடுகையில் மனித நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அது எனக் குறிப்பிடுவார். வேட்டை நிலையிலிருந்து (குறிஞ்சி) வேளாண்மை செய்யும் நிலைக்கு (மருதம்) தமிழர் வளர்ச்சி பெற்றமையை இது சுட்டுகிறது. என்பதே அவரது அபிப்பிராயம்.
சிங்கார வேலு
தமது Social life of Tamils எனம் நூலில் இதனை பரிணாம வளர்ச்சி என ஒப்புக் கொண்டு அதனை மானிடவியல் ரீதியாக விளக்கியுள்ளார். தனது Sangam polity நூலில் பெரிய இடத்திற்குச் சொன்ன பரிணாம வளர்ச்சி சின்ன இடத்திற்குப் பொருந்தாது என வாதித்துள்ளார்
.
கைலாசபதி
தனது Heroic poetry எனும் நூலிலும் தமிழர் வாழ்வும் வழிபாடும் எனும் நூலில் எழுதிய தனிக்கட்டுரைகள் சிலவற்றிலும் இப்பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே சங்க இலக்கியங்களையும் சங்ககாலத்தையும் நோக்கியுள்ளார்.
வேட்டையாடிய, மந்தை மேய்த்த குறிஞ்சி முல்லை, காலத்திலிருந்து நிலைத்த வாழ்வு பெற்று நிலம் திருத்தி வேளாண்மை செய்த மருதநில காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகவே அவர் குறிஞ்சி, முல்லை, மருத, நில நாகரீக வளர்ச்சியைக் காணுகிறார். அவரது பேய்மகளிர், கொடி நிலை கந்தழி, முதலிய கட்டுரைகள் சில, புராதன தமிழர்கள் பற்றிக் கூறுபனவே.
புதைபொருள் ஆய்வாளர்களான ஆல்ச்சின், சுப்பராவ் போன்றோர் சமூக வளர்ச்சிப் போக்கில் சமாந்திரமற்ற வளர்ச்சி ஏற்படும் என்பதனை ஏற்றுக் கொண்டு தமிழ் நாட்டை இதற்குரிய பகுதியாக இனம் கண்டு புவியியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தமிழ்நாடு சமாந்திரமற்ற வளர்ச்சியுடைய பகுதி என்று தமது எழுத்துக்களில் நிறுவியுள்ளனர்.
சிவத்தம்பி
தனது இயக்கமும் இலக்கியமும் எனும் கட்டுரையில் இக்கோட்பாட்டை ஆதரித்ததிலிருந்து இக்கோட்பாட்டின் பின்னணியிலேயே சங்க காலத்தை ஆராய்ந்துள்ளார்.
அவரது Drama in ancient Society எனும் நூலில் புராதன தமிழ் நாடக வளர்ச்சியை (சங்க கால நாடக வளர்ச்சியை) இக் கோட்பாட்டின் பின்னணியிலிருந்து விளக்கியுள்ளார். தனது Studies in ancient Tamil society Economy,Society and State formation என்னும் நூலில் இக்கோட்பாட்டின் பின்னணியிலிருந்து சங்ககால மக்களின் பொருளாதார வாழ்வு சமூக அமைப்பு அரசுருவாக்கம் என்பனவற்றை ஆராய்ந்ததுடன் சங்ககாலத்தில் சமனற்ற சமூக பொருளாதார வளர்ச்சி இருந்தது. என்கிற சிந்தனையை அழுத்தமாக முன் வைத்துள்ளார்.
நா.வானமாலை,
ஆ.சிவசுப்பிரமணியம்
,
சுப்பராயலு,
கேசவன்,
அ.மார்க்ஸ்,
ராஜ்கௌதமன்,
செண்பகலக்சுமி
, போன்ற தமிழ்நாட்டு ஆய்வாளர்களும்
பேட்டன் ஸ்ரைன்,
நொபுறு, கறோசிமா
,
கதலின் கௌ
போன்ற தமிழ் ஆய்வு செய்த பிற நாட்டவரும் இப்பரிணாமக் கருத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் ஆய்வு செய்த ஆய்வாளர்களாவார்கள். .
இவர்களைப் பின்பற்றி இன்று பல இளம் ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளைக் தொடருகின்றனர்.

தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்த விதம்.
______________________________________________
பொருளதிகாரத்தில் அகத்திணையியலில் தொல்காப்பியர் பாடலுள் வரும் விடயங்களை மூன்றாகப் பிரிக்கின்றார். அவையாவன
முதற்பொருள்,
கருப்பொருள்,
உரிப்பொருள்,
தொல்காப்பியம் அகத்திணையியல் சூத்திரத்தில்
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே.
பாடலுள் பயின்றவை நாடும் காலை
என்பார் தொல்காப்பியர்.
இவற்றுள் உரிப்பொருளே முக்கியமானது.
உரிப்பொருள் என்பது அந்நிலத்தில் நிகழும் அகஒழுக்கமாகும்.
அதாவது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே (தலைவனுக்கும் தலைவிக்குமிடையே) வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் புணர்வு, பிரிவு, காத்திருப்பு, இரங்கல், ஊடல், ஆகிய மன உணர்வுகளாகும்.
இவ்வுரிப் பொருளைச் சிறப்பிக்கவே முதற்பொருளும், கருப்பொருளும் உதவும்.
முதற்பொருள் என்பது அந்த ஒழுக்கம் நிகழும் நிலமும், பொழுதும் ஆகும்
. இவ்வண்ணம் நிலம் பற்றிக் கூறிய தொல்காப்பியர் அந்நிலத்தை காடுறை உலகம் (முல்லை)
மைவரை உலகம் (குறிஞ்சி)
தீம்புனல் உலகம்(மருதம்)
பெருமணல் உலகம் (நெய்தல்)
என நான்கு நிலமாகப் பிரிக்கின்றார்.
பாலை நிலம்
___________________
.
பாலை நிலம் பற்றித் தொல்காப்பியர் எதுவும் கூறவில்லை
. பாலை பற்றிக் கூறப்படுவது சிலப்பதிகாரத்திலே தான்.
சிலப்பதிகாரத்தில் காடு காண்காதையில் 60-66வரையுள்ள வரிகளில் பாலை நிலம் பற்றிக் கண்ணகிக்கும், கோவலனுக்கும் கவுந்தியடிகள் கூறுவதாக இளங்கோவடிகள் இவ்வாறு கூறுகிறார்.
கோத் தொழிலாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியலிழந்த வியனிலம்போல
வேனலங்கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து
நல்லியல்பிழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாவை என்பதோர் படிவம் கொள்ளும்.

இவ்வரிகளுக்கு ந.மு வேங்கடசாமி நாட்டார் பின்வருமாறு உரை கூறுவார்.
“அரசியல் தொழிலினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் செங்கோல் செலுத்தாமல் விடுதலாலேயே அரசின் இயல்பை இழந்த அகன்ற நிலத்தைப் போல வேனிலாகிய அமைச்சனொடு வெல்லிய கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன் நலம் வேறுபடுதலால் தமது இயற்கை கெட்டு முல்லை குறிஞ்சி எனும் இரு திணையும் முறைமை திரிந்து தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோர் நடுங்கும் வண்ணம் துன்பத்தினை உறுவித்து பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும்.”
இதன்படி வேனிற் காலத்தில் குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் பாலை நிலமாக மாறுகின்றன என்பது தெரிய வருகிறது.
வேனிற் காலம் வந்ததும் (சித்திரை வைகாசி) சூரியனுடைய வெப்பம் அதிகம் ஏற்படும்.
வேனிற் காலமும் சூரிய வெப்பமும் இணைய மழை ஏற்படாது நிலம் வரளும். இந்நிலையில் செழிப்பாயிருந்த குறிஞ்சி, நிலமும் பசுமை நிரம்பிய காட்டு நிலமான முல்லை நிலமும் தமது செழிப்பு, குளிர்ச்சி என்ற இயல்பினின்றும் மாறி வரட்சி மிக்க பாலை நிலமாகி விடும்.
இப்பாலை மற்றவர்க்கு துன்பம் தரும் நிலமாகும.;
இக்காலத்திலே தான் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொரு குடியிருப்புக்கு மக்கள் செல்வர்.
உடன் போக்கு (பெண்ணைக் ஆண் கூட்டிக் கொண்டு ஓடுதல்) பொருள், வயிற்பிரிவு என்பன இக்காலத்திலேதான் நிகழும். இதனாலேயே பாலைக்கு பிரிவு என்பது வந்தது.
மீண்டும் வேனிற் காலம் போய் மழைகாலம் தோன்றியதும் பாலை நிலம் மாற்றமடைந்து தன்னியல்பான குறிஞ்சி, முல்லை, நிலமாகி விடும்.
இதன்படி பாலை என்ற ஒரு நிலமில்லை.
அது காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் ஒரு நிலம் என்பது தெளிவாகிறது.
பாலை என்ற மரம் இங்கு முக்கியமானது. (மட்டக்களப்பிலே பாலை மரம் உண்டு. சித்திரை மாதத்தில் பாலைப்பழம் இங்கு அதிகம்) பாலை மரம் பக்க வேர்களைக் கொண்டதல்ல. நீண்ட ஆணி வேரைக் கொண்டது. அதன் ஆணிவேர் மைல் கணக்கில் கீழே சென்று நிலத்தின் ஆழத்திலுள்ள அடி நீருடன் உறவாடும் தன்மை கொண்டது. எந்த வரட்சியும் பாலை மரத்தைப் பாதிக்காது. தாவரவியலுடன் இம் மரங்களை இணைத்துப் பார்க்கையில் தான் இத் தெளிவினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நிலத்தை நான்காக வகுத்தார் தொல்காப்பியர். அந்நிலத்தில் வழங்கும் கருப்பொருள்களை
தெய்வம்,
உணா,
மா,
மரம்,
புள்,
பறை,
செய்தி,
யாழ்
என்று பிரித்தார்.
இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கியர் அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலத்திற்கும் உதாரணம் தந்தார்.
அத்தோடு கருப்பொருள்களுள்; பூ, நீர், ஊர், என்பனவற்றையும் சேர்த்துக் கொண்டார்.
கீழ்வரும் அட்டவணை நமக்கு இதனைத் தெளிவாக உணர்த்தும்.
நச்சினார்க்கினியர் தரும் விபரம். –
அட்டவணை.
நிலம்
ஊணா மா (விலங்கு)
மரம்
புள்
பறை
செய்தி(தொழில்)
யாழ்
பூ
நீர்
ஊர்
குறிஞ்சி
_____________
ஐவன நெல்லு, தினை. மூங்கிலரிசி,
புலி யானை கரடி பன்றி
அகில் ஆரம் தேக்கு திமிசு வேங்கை
கிளி மயில்
முருகியம் தொண்டகப் பறை
தேன் அழித்தல் தினை முதலிய விளைவித்தல் கிளி காத்தல்
குறிஞ்சி யாழ்
காந்தள் வேங்கை சுனைக் குவளை
அருவி சுனை கான்யாறு

முல்லை
____________
வரகு சாமை முதிரை
உழை, புல்வயல், முயல்
கொன்றை குருந்து
கானக் கோழி சிவல்
ஏறுகோட் பறை
நிரை மேய்த்தல் வரகு முதலியன கட்டலும் கடா விடுதலும்
முல்லை யாழ் முல்லை பிடதள
கான்,யாறு
மருதம்
____________
செந்நெல் வெண்ணெல்
.
எருமை, நீர்நாய்
. மருதம் வஞ்சி காஞ்சி
தாரா நீர்க் கோழி
மணவுழவும் நெல்லரி கிணையும்
நடதல் களைகட்டல் அரிதல் கடா விடுதல்
. மருத யாழ்
தாமரை குழுநீர்
ஆற்றுமனைக் கிணறு, பொய்கை

நெய்தல்
______________
மீன், உப்பு
உமண் பசடு (முதலை, சுறா, மீனாதலின், மா என்பது மரபன்று.)
புனை ஞாழல் கண்டல்
அன்னம் அன்றில்
மீன் கோட்டறை
மீன் பிடித்தல் உப்பு விளைவித்தல் அவை விற்றல்
. நெய்தல் யாழ்
மணக்கிணறு உருவாக்குதல் குழி வெட்டுதல்
.
நிலம் ஊணா மா (விலங்கு) மரம் புள் பறை செய்தி
(தொழில்) யாழ் பூ நீர் ஊர்
பாலை
__________
ஆற வைத்த சூறை கொண்ட எல்லா உணவும்.
வலியிழந்த யானை ஆமை புலி செந்நாய்.
வற்றின இருப்பை ஊழிஞை.
கழுகு பருந்து புறா.
சூறை கோட்பறை நிரை
. ஆறவைக்கம் சூறை
பாலை யாழ். கோடல்
மரா குரா பாதிரி
ஆற்று நீர்க் கூவல், சுனை.

இந்நிலங்களுக்குரிய ஊர் பற்றிக் கூறும் நச்சினார்க்கினியர் பின்வருமாறு கூறுவார்.
_____________________________
குறிஞ்சி – ஊர்ப்பெயர் - சிறுகுடி, குறிச்சி
முல்லை – ஊர்ப்பெயர் - பாடி, சேரி
மருதம் - ஊர்ப்பெயர் - ஊர்
நெய்தல் - ஊர்ப்பெயர் - பட்டினம், பாக்கம்
பாலை – ஊர்ப்பெயர் - பறந்தலை
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள செய்தி (தொழில்) உணா, என்பனவும் பின்னாற் குறிப்பிடப்படும் ஊர்பற்றிய செய்திகளும் என்பனவும் மிகுந்த அவதானத்திற்குரியன.
நிலமும், தொழிலும், உணவும், வாழிடமும்.
___________________________________________________
குறிஞ்சி,நிலத்தில் வாழ்ந்தவர்கள்
தேன், அழித்து கிழங்கு அகன்று தினை விளைவிக்கிறார்கள். அவர்களது உணவு ஐவன, நெல்லு, தினை, மூங்கிலரிசி, என்று மிகப் புராதன உணவாக இருக்கிறது. இவர்கள் உணவு தேடும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் இடம் சிறுகுடி, குறிச்சி, என்று அழைக்கப்படுகிறது. (குறிச்சி எனும் பெயர் இன்று தாழ் நிலையிலுள்ளோர் இருக்கும் இடங்கட்குப் பாவிக்கப்படுவது மனம் கொள்ளத்தக்கது.)
முல்லை நிலத்தில் வாழ்ந்தவர்கள்
நிரை மேய்த்து வரகு முதலிய சிறு தானியங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வேட்டையாடி கிழங்கு அகன்று, உணவு தேடி வாழ்ந்த(food hunting) குறிஞ்சி மக்கள் அல்ல.
உணவு உற்பத்தி செய்யும் (Food producing)நிலையில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி பெற்ற முல்லை நில மக்கள்.
அவர்களின் உணவு, வரகு சாமை, முதிரை என்று உற்பத்தி செய்து உண்ணும் உணவு வகைகளாக குறிஞ்சி நிலத்தைவிடச் சற்று முன்னேறிய உணவு வகைகளாக உள்ளன.
அவர்கள் வாழும் இடம் பாடி,சேரி என்றழைக்கப்படுகிறது. இது குறிச்சியை விடச் சற்று வளர்ச்சி பெற்ற இடமாகக் காணப்படுகிறது. (ஆயர்பாடி, பறையர்சேரி, என்ற வழக்கு இன்னுமுண்டு,)
மருத நிலத்தில்
வாழ்ந்தவர்கள் நடுதல், களை கட்டல், அரிதல் முதலிய தொழில்களைச் செய்கிறார்கள் இங்கு வேளாண்மைச் செயல் தொடங்கியிருக்கிறது. நடுதலும், களைகட்டலும், வளர்ந்த பின்னர் அதனை அரிதலும், நடைபெறுகிறது இங்கு திட்டமிட்ட உணவு, உற்பத்தி நடைபெறுகிறது. இவர்கள் சாப்பிடுகிற உணவு, செந்நெல்லும், வெண்நெல்லும்;, ஆகும்.
கிழங்கு, அகன்று சாப்பிட்ட குறிஞ்சி மக்களை விட,
வரகு சாமை, சாப்பிட்ட முல்லை மக்களை விட
, இவர்கள் வயிறார வாயாரச் சாப்பிடும், வளர்ச்சியடைந்த மக்களாயுள்ளனர்.
அவர்கள் வாழ்ந்த இடம் ஊர் என்று அழைக்கப்படுகிறது
. நிலைபதியாக மக்கள் வாழும் இடமே ஊர் ஆகும்
. வேளாண்மை செய்ய ஆரம்பித்ததும் மந்தை மேய்த்துக் கொண்டு நாடோடியாகத் திரிந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து விடுதல் இயல்பு. மருதநில வளர்ச்சியுடன் தமிழர் வாழ்வும் நிலைத்து விடுகிறது. தமிழர் நிலைத்து வாழ்ந்தமைக்கு அடையாளம் இது.
நெய்தல் நிலத்தில்
வாழ்ந்த மக்கள் மீன் பிடிக்கிறார்கள். உப்பு விளைவிக்கிறார்கள். அவர்கள் உணவு உப்பும் மீனும். தமிழர் உணவில் மீனும் உப்பும் சேர்ந்து விடுகிறது. அவர்கள் கடலை வளமாக்கி உப்பும், மீனும் சேர்க்கும் மக்கள். கடலை வழியாக்கி கடல் வாணிபம் செய்த மக்களும் இங்கு வாழ்ந்தனர்.
ஏனைய நாட்டவர்களை கடற்கரையோரத்தில் இம்மக்கள் சந்தித்ததில் கலாசார பரிவர்த்தனை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு.
வாணிபம் இதனால் வளர்ச்சியுற்றது. வாணிக வளர்ச்சியும் செல்வப் பெருக்கும் நகர்ப்புறங்களைத் தோற்றுவிக்கும்.
நகரமே அரசரது தலை நகராகும்.
அதுவே அதிகாரத்தின் மையமும் ஆகும்.
இவர்கள் வாழும் இடம் பட்டினம், பாக்கம், என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்நானிலம் பற்றி மாத்திரமே தொல்காப்பியர் கூறினார். தொல்காப்பியர் இவை ஒவ்வொன்றையும் ஒரு உலகமெனக் கண்டார்.

மாயோன் மேய காடுறை உலகம்
சேயொன் மேய மைவரை உலகம்.
வேந்தன் மேய தீம்புனல் உலகம்
வருணன் மேய பெருமணல் உலகம்
.
என ஒவ்வொரு நிலத்தொகுதியும் ஒவ்வொரு உலகமாகத்தான் அவருக்குத் தெரிகிறது.
அவற்றிற்கு அவர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிடுகிறார்.
அவர் தொல்காப்பியத்தை இயற்றியது மருதநில நாகரிகம் வளர்ச்சி பெற்று விட்ட காலப்பகுதியில் என்பதனை நாம் மனம் கொள்ள வேண்டும்.
அவர் காலத்தில் அவர் பார்வையில் இந்
நானிலங்களும் புவியியல் அடிப்படையில் தனித்தனி உலகங்களாகத்தான் இருந்தன.
பாலை நிலம் எவ்வாறு இலக்கண மரபுக்குள் உள்வாங்கப்பட்டது என்று முன்னரேயே கூறப்பட்டுள்ளது
. பாலை, நிலத்தில் வாழ்ந்த மக்கள் களவெடுத்தலையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர்.
நாட்டின் சனம் குறைந்த வரண்ட நிலை ஏற்பட்ட பின்னர் அப்பாலையினால் செல்லும் மக்களிடமிருந்து தான் இவர்கள் உணவைப் பறித்தெடுத்தனர். களவெடுத்தலில் கிடைத்த எல்லா உணவுகளும் இவர்களின் உணவுகளாயின. இவர்கள் வாழ்ந்த இடம் பறந்தலை என்றழைக்கப்பட்டது.
தொல்காப்பியர் கி.பி 5ம் நூற்றாண்டில் தன் கால நிலையிலிருந்து சொன்ன சூத்திரத்திற்கு
கி.பி 12ல் வாழ்ந்த நச்சினார்கினியார் மேற்கண்டவாறு ஒரு வளர்ந்து வந்த வரலாறுகளுடன் இதனை ஒப்பிடுவதன் மூலமும் நாமும் சில முடிவுகளுக விளக்கம் தந்தார்.
இவ்விளக்கத்தை ஆராய்ந்து பார்த்தல் மூலமும்உலக இனங்களின் நாகரீக வளர்ச்சியுடன் தமிழர் நாகரீக வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கலாம் .
இந்த விளக்கத்திலே வேட்டையாடுதலிலும்
கிழங்கு அகழ்தலிலும் இருந்து
மந்தை மேய்த்தலுக்குக்கூடாக
நிலம் பண்படுத்தி விவசாயம் செய்து செந்நெல்லும,; வெண்நெல்லும் சாப்பிட்டு
பட்டினம் கண்டு வாணிபம் செய்து வளர்ச்சி பெற்றதுவரை
ஒரு பரிணாம வளர்ச்சியைக் காணுகிறோம்.
இப்பரிணாம வளர்ச்சிக்கூடாகவே
தமிழர் சமூகம் வளர்ந்திருக்க வேண்டும்.
சங்க கால இலக்கியங்களிலே இதற்கான தடையங்கள் பலவற்றை நாம் காணுகிறோம்
.
மேற்குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியிலே
மருதம் பின்னாளில் வருகிறது.
மருத நிலத்திலே தான் விவசாயச் சமூகமாகத் தமிழகம் உருப்பெற்றது
.(இக் கட்டுரையின் இறுதிப் பகுதி நாளை இடம் பெறும்) .
மௌனகுரு

No comments:

Post a Comment