Tuesday 21 April 2015

தாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை...... ( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும் ஓர் எத்தனம்) கட்டுரைத் தொடர் -2

தாய்த் தெய்வத்திலிருந்து
போர்த் தெய்வம் வரை......
( கலிங்கத்துவப் பரணி காளி வழிபாட்டைப் புரிந்துகொள்ளும்
ஓர் எத்தனம்)
கட்டுரைத் தொடர் -2
_________________________________________________
மௌனகுரு
___________________________________________________________
குரூரம் அழகாகக் கூறப்படுகிறது.இதனை நாம் குரூர அழகு ( cruel beauty) எனலாம். இத்தகைய ஒரு குரூர அழகு அரசராலும் புலவராரும் கற்றோராலும் சுவைத்து மகிழப்படுகிறது அரசவையில் அரங்ககேற்றப்படுகிறது. இக்குரூர அழகைப் பாடிய சயங்கொண்டானுக்கு கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுபடுகிறது.
__________________________________________________________
காளி பற்றிய பொது அறிமுகம்
_________________________________
இந்தியாவிலே காளி வழிபாடு பிரசித்தமானது.
வடகிழக்கு இந்தியப் பகுதிகளான வங்காளம், அஸ்ஸாம், நேபாளம் ஆகியவற்றிலும்
வடமேற்கு இந்தியப் பகுதிகளான காஸ்மீர், பஞ்சாப் ஹிமாசலப் பிரதேசம் ஆகியவற்றிலும்,
தென்னிந்தியப் பகுதிகளான ஆந்திரா, கர்னாடக, தமிழ்நாடு, கேரளா பகுதிகளிலும்
இலங்கையிலும் காளி வழிபாடு பிரசித்தமானது.
காளியின் தோற்றம் ஏனைய பெண் தெய்வத் தோற்றங்களினின்றும் மிக வேறுபாடுடையது
பெண்ணுக்கு இந்தியச் சமூகம் விதித்த விதிகட்கு உட்படாதது
. David Kingsly என்பார். ஆதனை மோசமாகப் பயமுறுத்தும் ஒரு தோற்றம் எனக் கூறி அத் தோற்றத்தினைப் பின்வருமாறு விளக்குவார்.
கறுப்பு நிறம்
, நிர்வாணத் தோற்றம்,
நீண்ட விரித்த தலைமயிர்,
புதிதாக வெட்டப்பட்ட தலைகளான மாலை
, வெட்டப்பட்ட கைகளாலான இடுப்புப் பாவாடை
,
சிறு குழந்தைகளின் பிணங்கள் காதணிகள்,
பாம்புகள் கைவளையங்கள்,
நீண்ட கூரிய கடைவாய்ப்பற்கள்
,
நீண்ட கூரிய நகங்கள்,
இரத்த நிறம் கொண்ட உதடுகள்,
வெளியில் தொங்கவிட்;ட நீண்டு நாக்கு
, யுத்தகளத்தில் எப்போதும் காணப்படுவாள்.
அங்கு தன் எதிரிகளின் ரத்தம் குடிப்பாள்,
மயான பூமியில் திரிவாள்
பிணங்களுக்கு மேல் அமர்ந்திருப்பாள்.
ஆவளைச் சூழ நரிகளும், பேய்களும் நிற்கும்.
காளி பற்றிய எழுத்துக்கள் (Kali studies ) நிறைய உள்ளன
. அதன்படி ஆரம்பத்தில் இவள் ஒரு இனக்குழு தெய்வமாக இருந்தவள் என்றும்
கி.பி. 3ம் நூற்றாண்டில் குப்தகாலத்தில் ரத்த தாகமுள்ள போர்த் தெய்வமாக அறியப்பட்டாள் என்றும்
கி.பி. 6ம் நூற்றாண்டில் தேவிமாகாத்மியத்தில் அவள் துர்காவாக அறியப்பட்டாள் என்றும்,
காதம்பரி, மாலதிமாதவம் நாடக இலக்கியம் மூலம் அவள் சண்டி, சாமுண்டியானாள் எனவும்
கி.பி. 8ம் நூற்றாண்டில் தாந்திரிகக் கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டாள் என்றும்
லிங்கபுராணம், மூலம் தாருகளைக் கொல்லச் சிவனுடல் புகுந்து காளியானாள் என்றும்
அதன் பின் சிவனுடன் இணைக்கப்பட்டாள் என்றும்
அறிகிறோம்
. இவ்வகையில் காளியின் வளர்ச்சியை
இனக்குழுத் தெய்வம்
போர்த் தெய்வம்
சண்டி, சாமுண்டியாக விரிவு
தாந்தீரிகத் தெய்வம்
சிவனின் சக்தி
என்ற வகையில் புரிந்துகொள்கிறோம்.
மானஸர சில்ப சாஸ்திரத்தில் காளி கோயில் அமைப்பது பற்றிக் கூறப்படுமிடத்து
1 . நகரத்திற்கும் கிராமத்திற்கும் மிக தொலைவில் காளிகோயில் கட்டப்பட வேண்டுமென்றும்
.
2.. மயான பூமிக்கருகிலும், மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகமான சண்டாளர் வாழும் இடத்திலும்; அக்கோயில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காளி வழிபாடே தமிழ்நாட்டின் அன்னை வழிபாட்டுடன் இணைந்து காளி வழிபாடாகிறது என்பது அறிஞர் முடிவு
சோழர் காலத்துக் கலிங்கத்துப் பரணியில்
இக்காளி வருணனை வருகிறது.
கலிங்கத்துப் பரணியில் காளியின் தோற்றம்
_________________________________________________
கலிங்கத்துப் பரணியிலே காடு பாடியது, கோயில் பாடியது, தேவி பாடியது என்னும் பகுதிகளிலே காளியும், காளியின் பின்னணியும் கூறப்படுகிறது.
உறைவிடம்
________________
காடு பாடியதில் காளி உறையும் நிலம் கூறப்படுகிறது. புhலைவனச் செடிகள், நில வெடிப்பு, பாலைவன வெம்மை, மரங்கள் கருகுவதால் வரும்புகை சுடுகாடு சூறைச் காற்று என வரும் வர்ணனைகளில் வரட்சி வறுக்கிறது. காளிக்குரிய இடம் பாலைவனம், சுடுகாடு. ஊரல்ல ஒதுக்குப்புறம் என்பது தெரிகிறது
.
கோயில்
____________
கோயில் பாடியது எனும் பகுதியில்
சோழன் வாளுக்கிறையான மன்னரின் மனைவிமார்களின் அணிகலன்களையும் இரத்தினங்களையும் அத்திவாரமாக இட்டு,
சோழமன்னன் எதிரிகளின் தலைகளை கற்களாக வைத்து
வீரர்களின் நிணங்களைச் சாந்து ஆக்கி, சர்ந்து ஆக்குவதற்கு வீரர்களின் இரத்தத்தைத் தண்ணீராக ஊற்றி
, காவற்காட்டு மரங்களை உத்தரங்களாக்கி
போர்க்களத்தில் இறந்த யானைக் கொம்புகளைத் துலாமாக்கி
யானைகளின் விலா எலும்புகளால் மேற்பரப்பை நிரப்பி,
பகைவரிடம் பறித்த யாளி, யானை; பன்றிக் கொடிகளால் மேல்முகடு அமைத்து மேல் முகடுஇடைவெளிகைள துங்கபத்திர போர்க்களத்தில் சோழன் கொன்ற யானைகளின் முகபடங்களால் மறைத்து செய்யப்பட்ட கோயில் என்று கூறப்படுகிறது.
மதிற்சுவர்
_____________
இறந்துபட்ட வீரர்களின் வெள்ளெலும்புகளால் மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது.
சுறாமீன் வடிவில் அமைந்த தோரணவாயிலில் மயில்களின் கழுத்துக்களும்,
பச்சிளம் குழந்தைகளின் தலைகளும் பொறிக்கப்பட்டு
யானைகளின் அறுக்கப்பட்ட காதுகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
______________
கோயிலைச் சூழ பிரார்த்தனை ஒலி கேட்கிறது.
அம்மையே எனது அங்கங்களை உனக்கு அளிக்கிறேன் என்ற குரல்கள் கேட்ட வண்ணம் உள்ளன.
ஒரு பக்கம் ஓமத்தீ வளர்க்கப்படுகிறது அம்மை புகழ்பாடி தம் விலா எலும்புகளைப் பிடுங்கி வீரர்கள் ஒமத்தீயுனுள் போடுகிறார்கள். அத்தீ எரிய உதிரத்தை நெய்யாக வார்க்கிறார்கள்.
தலைகளைத் தம் கழுத்தோடு அறுத்து காளிக்குக் கொடுக்கிறார்கள். ( அறுபட்ட நிலையிலும் அத்தலைகளின் வாய்கள் காளியின் பெயரை உச்சரிக்கின்றன.) சாவுக்கு அஞ்சாது தம்மையே தாம் கொலை செய்யும் மனிதக்கூட்டம்.
வெட்டப்பட்ட குறை உடல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. அவை தரையில் விழு மட்டும் பேய்கள் அந்த உடலைத் தொடர்ந்து போகின்றன.
எருமைக் கடாவை எக்காள ஒலியுடன் பலியிடுகிறார்கள்.
தமருகம் ஒலிக்க, அதன் ஜதிக்கு ஏற்ப சாதகர் எனும் பேய் 'இனமும் தாள கதியோடு வரும் யோகின pமாதரும் வலக்கையில் படையையும் இடக்கையில் பசும் தலைகளையும் தூக்கிக் கொண்டு ஆடி வருகிறார்கள்.
காட்சிகள்
____________
மூங்கில் கழைகளில் அறுந்த வீரர்களின் தலைகள் தொங்குகின்றன.
பாரம் தாங்காமல் கழைகள் வளைந்து வளைந்து அசைகின்றன.
குழவிப் பேய் மாமிசத் துண்டைக் கேட்டு அழுகிறது,
நரி ஊழையிடுகிறது. நரிகளின் வாயில் உள்ள மாமிசத்துண்டுகளை தாய்ப் பேய் பறித்தெடுத்து குழவிப் பேய்க்குக் கொடுக்கிறது.
பருந்துகள் தசையையும், நிணத்தையும் கொத்திக் கொத்திப் பறித்தெடுக்கின்றன.
நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது
.
தேவி பாடியது
________________
பாலை நிலத்திலே ஈமப் புறங்காட்டில் வரட்சிப் பின்னணியில் இறந்தோரின் தலைகளை வைத்து
அவர்கள் நிணத்தால் பூசப்பட்டு கட்டப்பட்டு,
குழந்தைகளின் தலைகள் பதித்த கோயிலில்
காளி அரசி கொலு வீற்றிருக்கிறாள்
.
பாத அழகு
____________
அவள் பாதங்களில் வாசுகி ஆதிஸேசன் என்ற இரண்டு பாம்புகளும் காற் சிலம்புகளாகக் கிடக்கின்றன.
வானத்து மீன்கள் அதன் மணிப்பரல்களாக உள்ளன.
நடை அழகு
_______________
காளி நடக்ககையில் பூமியில் குழிவு ஏற்படுகிறது.
கொங்கை அழகு
__________________
அவளுடைய கொங்கைகள் மிகப் பெரியனவாகவுள்ளன.
அத்தனங்கள் மீது திருநீறு பூசப்பட்டுள்ளது
. அது சிவபெருமான் நுகர்வதற்குரியது.
உடை அழகு
______________
யானைத் தோல் போர்த்திருக்கிறாள்.
அது வழுவாதிருக்க யானையின் குடலாலும் அதனைக் கட்டியிருக்கிறாள.;
பாம்புகளை ஒட்டியாணமாக அணிந்திருக்கிறாள்.
வயிற்றழகு
_____________
பிரமனையும், கண்ணனையும் விநாயகனையும், முருகனையும் பெற்ற வயிறு அது (சிவனைப் பெற்றது கூறப்பட வில்லை)
மேலாடை அழகு
_________________
கடும் விஸத்தை உமிழும் பாம்புகளை மேலாடையாக அணிந்துள்ளாள்.
கை அழகு
____________
வீரர்கள் தம் சிரங்களை அரியும் போது வழியும் இரத்தத்தை அள்ளி அள்ளி அவள் கைகள் சிவந்திருக்கின்றன
. மதயானையின் மதவெள்ளத்தில் கழுவுதலினால் அவள் கைகள் கருநிறமும் பெற்றுவிடுகின்றன.
இதழ் அழகு, கண்ணழகு, வாயழகு
____________________________________
இறைவனுக்கு அமுதபானம் தர அது காத்திருக்கிறது.
அவள் வாய் மழலை பேசுகிறது
. அவள் சிரிக்கும்போது முத்துப் பற்கள் தெரிகின்றன.
அவள் உதடுகள் பவளம் போல சிவந்திருக்கின்றன
. இவை யாவும் இறைவனின் விரகத் தீயை அணைக்க ஆயத்தமாக உள்ளன.
குலகிரிகள் அவள் காதில் குழைகளாக ஆடுகின்றன.
அக்கிரிகளை அவள் மார்பில் மாலையாக அணிவாள்.
அம்மானை ஆடுவாள், பந்தாக உருட்டுவாள்,
சுழற்சியாக எறிவாள்.
காளி கொலு வீற்றிருக்கும் காட்சி
______________________________________
குரூரக் காட்சிகளுக்கு ஏற்ப குரூரக் கொலு வீற்றிருப்பும் அமைகிறது.
கட்டில்
சூழவரப் பேய்கள் கூட்டம் நிற்கிறது.
அவைகளின் நடுவினிலே பெரும் தீடக் கால்கட்டில் இருக்கிறது.
எலும்புகளை அடுக்கி குடல்களினால் வரிந்து கட்டிய குருதி படிந்த தோற்றமுடைய கட்டில்.
மெத்தையும் தலையணையும்
_____________________________________
கட்டிலின் மீது ஐந்து பிணங்களை அடுக்க மெத்தையாக வைக்கப்பட்டுள்ளது
. வெண்ணிறமுள்ள கொழுப்பு சீலையாக மெத்தை மேல் விரிக்கப்பட்டுள்ளது
. ஒருசில பேய்களை முறித்து தலையணையாக வைக்கப்பட்டுள்ளது.
சுடலையில் பிணங்களைத் தின்னும் இடாகினி அன்னையின் பக்கத்தில் நின்று ஈச்சோப்பி எனும் கருவியை அசைத்து வீசிக்கொண்டிருக்கிறாள்.
தேவி, பிண்டி கபாலம் எனும் ஆயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறாள்.
உரையாடல்
________________
பின்னர் பேய்களுடன் உரையாடுகிறாள்.
பேய்களின் வற்றிய வயிறு வீங்க வளமான விருந்து போர்க்களத்தில் கிடைக்கும் என்கிறாள்.
பிணங்களைத் தின்னலாம்
, இரத்தம் குடிக்கலாம் என்று
தேவியின் உரைகேட்டு பேய்கள் மகிழ்கின்றன.
குரூர அழகு
_________________
இங்கு குரூரம் அழகாகக் கூறப்படுகிறது.
இதனை நாம் குரூர அழகு ( cruel beauty)எனலாம்
.
இத்தகைய ஒரு குரூர அழகு அரசராலும் புலவராரும் கற்றோராலும் சுவைத்து மகிழப்படுகிறது
. அரசவையில் அரங்ககேற்றப்படுகிறது
. இக்குரூர அழகைப் பாடிய சயங்கொண்டானுக்கு
கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுபடுகிறது
.(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment