Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 3

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -3
________________________________________________________
மௌனகுரு
__________________________________________________________
பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென
அழைத்தனர்.
__________________________________________________________
ஆசிய உற்பத்தி முறை என்பது என்ன?
ஆசிய உற்பத்தி முறையில் அரசே நேரடி நில உடமையாளராக இருந்தது. நிலத்திற்கு தனியான உடைமை இல்லை. கூட்டு உடைமையாக இருந்தது.
ஒரு கிராமத்திற்கு நிலம் இருக்குமாயின் இந்த கிராமத்திற்கே நிலம் சொந்தமாக இருக்கும்.
நிலம் அரசுக்கு அல்லது கிராம சமுதாயத்திற்கு உடமையாக இருந்தது. கிராம சமூகத்தில் தனி நபருக்கென சுதந்திரமோ அல்லது விருப்பமோ இருந்ததில்லை.
அது கிராமத்தின் சுதந்திரமாக, கிராமத்தின் விருப்பமாகத்தான் இருந்தது.
வேலைப்பிரிவினையிலிருந்து உற்பத்தி தனித்து இருப்பதால் உற்பத்திப் பொருட்கள் பண்டத்திற்குரிய தன்மையினை இங்கு பெறாது
. இதனோடு கூட கீழ்த் திசைக் கொடுங்கோன்மையின் அரச அதிகாரம், நீண்ட நெடுங்காலம் தேக்கடைந்திருந்த உற்பத்தி நெகிழ்வு, என்பதனையும் சேர்த்துக் கொண்டால் ஆசிய உற்பத்தி முறைபற்றித் தெளிவான ஒரு அபிப்பிராயம் எமக்கு கிடைக்கும்.
கீழ்த் திசைக் கொடுங்கோன்மை என்பது கிழக்கு நாடுகளில் நிலமானிய அரசனின் எல்லையற்ற அதிகாரம் (இவ்வதிகாரம் கொடுமையான ஆட்சிக்கும் அரசனை இட்டுச் சென்றது.)
நெடுங்காலம் தேக்கமடைந்த உற்பத்தி எனில் ஒரேவிதமான உற்பத்தி நீண்டகாலம் நிலவியமை. (உற்பத்தி மாறினால் தான் சமுகம் மாறும். ஓரேவிதமான உற்பத்தியாயின் ஒரே விதமான சமுக அமைப்புத்;தான் நிலவும்.)
ஆசிய உற்பத்தி முறையின் பிரதான அம்சம் என்னவெனில் தன்நிறைவுள்ள கிராமங்களாகும்
. ஒவ்வொரு கிராமமும் தனக்குரிய நிலத்துடன் தனக்குரிய சமூக அமைப்புடன், தனக்குரிய கலை கலாசாரங்களுடன் தனியாகவே வாழுகின்ற சூழலை இந்த ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்தியிருந்தது.
இதனை இவ்வாறு விளக்கலாம்.
ஒரு கிராமத்தினை எடுத்துக் கொண்டால் அங்கே ஒரு பக்கத்தில் உற்பத்தி நிகழும் நிலமும், இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்திக்கான கருவிகள் செய்பவர்களும் இருப்பார்கள்.
இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்தியினைக் கவனிக்கின்ற பிரபுக்கள் இருப்பார்கள்.
அந்தப் பிரபுக்களை வழிப்படுத்த, நெறிப்படுத்த, மதங்களை வளர்க்க ஒரு பக்கத்தில் மதகுருமார் இருப்பார்கள்
. அடிமைவேலைகளைச் செய்ய குடிமக்கள் இருப்பார்கள்.
இவையெல்லாம் இணைந்ததாகத்தான் அந்தக் கிராமம் இருக்கும்.
அங்கே அவர்கள் இன்னொரு கிராமத்தில் அல்லது இன்னொருவரில் தங்கியிருக்கின்ற சூழல் அவர்களுக்கு இல்லை.
இதனைத் தான் தன்னிறைவுள்ள கிராமம் என்று அழைப்பர்.
தன்னிறைவுள்ள கிராமம் எவரிடமும் கையேந்தாது.
உணவு, உடை,பொழுதுபோக்கு, மதம், கலை, எல்லாவற்றையுமே அக்கிராமம் தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும்
. தன்னிறைவுள்ள கிராமம் ஏன் பிறர் தயவை எதிர் பார்க்க வேண்டும்?
. பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென அழைத்தனர்.
சோழர் காலச் சமூகஅமைப்பினை ஆராய்ந்த கத்தலின்கவ், சோழர் கால உற்பத்தி ஆசிய உற்பத்தி முறைமைக்குக் கிட்டதட்ட வருவதாகக் குறிப்பிடுவர்.
ஆனால் இதனைக் குணா, நொபுறு கரோசிமா ஆகியோர் மறுப்பார்கள்.
நொபுறு கரோசிமா அவர்கள் தனிப்பட்ட ஆட்களின் கீழ் நிலம் இருந்தது. என்பதனையும், அவர்களுக்கென்று படை இருந்தது என்பதையும், அவர்கள் மன்னர்கட்குத் திறை செலுத்தினார்கள் என்பதனையும், காட்டி இங்கு நிலம் தனிவுடமையாக இருக்கவில்லைஎன்று நிருபித்து இது ஆசிய உற்பத்தி முறைக்குள் வராது என்று வாதிடுகிறார்.
கெயில்ஒம்பெத் அவர்கள் சோழர்கால நிலப்பிரபுத்துவத்தைச் சாதி நிலப்பிரபுத்துவம் என அழைப்பர்.
அதாவது இந்த உற்பத்தி முறையில் (நிலமானிய முறையில்) சாதி பிரதான இடம் வகித்தது.
நிலத்தின் உடமையாளர்களாக, அதிக நிலங்களைக் கொண்டவர்களாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே காணப்பட்டனர்.
முக்கியமாக பிராமணர், வேளாளர்
. ஏனைய சாதிகள் நிலம் அற்றவர்களாக இருந்தனர்
. இவர்கள் பண்ணை அடிமைகளாக வேலை செய்தனர்.
இவர்கள் சாலியர்,கைக்கோளர், பறையர்,கொல்லர்,தச்சர்,குயவர்,நாவிதர்,வண்ணார்,கணிகையர் எனப்பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சாதிப் பிரிவினையையும், அவர்களுடைய நிலையினையும் சமயங்களும் சமய தத்துவங்களும் நியாயப்படுத்தின
. சாதிமுறை இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை எனச் சில சமயவாதிகள் நிறுவினர்.
இச்சமய ஞாயப்பாடு அவர்களுக்கு ஒரு கருத்தியல் தடையை விதித்தது.
தமது அடிமை நிலை ஞாயமானது என மனதளவில் ஏற்றுக் கொள்ள வைத்தது.
இதனால் அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் கிளர்ந்தெழ முடியவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு இராணுவத்தின் வேலையைச் சாதியமைப்புச் செய்தது என்பர்.
இது ஒரு வகையான பண்பாட்டு அடிமை முறையாகும்.
இராணுவத்தினால் அடக்குவதற்குப் பதிலாக கருத்துக்களால் மக்களை அடக்கி வைத்திருந்தமையாகும்.
இவ்வடக்கு முறைக் கருத்தியலைக் கோயில்களும் மடங்களும் ஊட்டின.
பணக்காரர்களினதும் நிலப்பிரபுக்களினதும் ஆதரவு அபரிதமாகக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏன் கிடைத்தது என்பதற்கான விடையும் இங்குதான் உண்டு
.(நாளை தொடரும்)

No comments:

Post a Comment