Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர்-1

    சங்ககாலம் எனப்படும் காலமும்,
    சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
    - ஒரு மீள்பார்வை-
    கட்டுரைத் தொடர்-1
    _________________________________
    அறிமுகம்
    தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியோர் தமிழரின் ஆரம்பகால இலக்கியங்களுக்குச் சங்ககால இலக்கியங்கள் என்ற பெயரிட்டனர்.
    இறையனார் களவியலில் வரும் சங்கம் பற்றிய கட்டுக்கதையை ஆதாரமாக வைத்து இதனைச் சங்க காலம் எனவும், அக்காலத்து இலக்கியங்களைச் சங்க கால இலக்கியங்கள் எனவும் அழைத்தனர்.
    சங்கம் இருந்த கதை ஒரு கட்டுக்கதை என முதலில் கூறியவர் மு.வே.சிவராஜபிள்ளையாவர்
    . கடவுள் இருந்து தமிழ் வளர்த்த கதை சரித்திரத்திற்கு ஒவ்வாமையினாலும்,
    சங்கம் இருந்த கால எல்லை பற்றி இறையனார் களவியல் உரை ஆசிரியர் கூறுவது காலக் கணிப்புக்கும், இதுவரை செய்யப்பட்ட நிலவியல் ஆராய்ச்சிக்கும் ஒத்து வராமையினாலும்
    . அது கட்டுக்கதை என ஆதாரங்களுடன் நிறுவிய ஆய்வாளர்
    சமண, பௌத்தர் தமிழைத் தம் மதம்பரப்பப் பயன்படுத்தியமையும்
    , மக்கள் மத்தியில் தமிழால் செல்வாக்குற்றமையும் கண்டு சைவப் புலமையாளர் தமிழைத் தம் சமயமயமாக்க எடுத்த முயற்சியே அக்கட்டுக்கதை என்றும் விளக்கம் கொடுத்தனர்.
    ஆராய்ச்சி உலகில் இது ஏற்கப்பட்டதாயினும்
    இன்னும் இக் கருத்து பொதுமக்கள் உலகில் ஏற்கப்படவில்லை.
    சைவத்தோடு தமிழை இணைத்து அது சிவனும், முருகனும் வளர்த்த மொழி என்ற கருத்துருவோடு சங்கம் உணர்ச்சி ரீதியாகப் பிணைக்கப்பட்டமையினால் சங்கம் இருந்தது என்ற ஐதீகம் உண்மை என இறுகிவிட்டது.
    இதனால் இன்றும் சங்ககாலம் என்றும், சங்கமருவிய காலம் என்றும் கூறும் வழக்கு இருந்து வருவதுடன் அது உண்மை என ஏற்கப்படவுமாயிற்று.
    ஐதீகம் ஒன்று, சரித்திரமான கதை இது.

    சமூக வரலாற்றுப் போக்கிலும் தேவையிலும் சரித்திர உண்மைகளை விட ஐதிகங்களே உண்மையாகி வழி நடத்துவதற்குப் பல உதாரணங்களை நாம் காட்ட முடியும.;
    எனவே தான் இக்கட்டுரைக்கான தலைப்பில் சங்ககாலம் எனப்படும் காலம் எனவும், சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்கள் எனவும் குறிப்பிட வேண்டி வந்தது.
    சங்ககாலத்தை கி.பி 100 தொடக்கம் 300 வரையுள்ள காலப்பகுதி என்பர் பேராசிரியர் செல்வநாயகம்.
    அக்காலத்தை கி.மு 100 தொடக்கம் கி.பி 250 வரையுள்ள காலப்பகுதி என்பர் கமில்ஸ்வலபில்.
    இச்சங்க கால இலக்கியங்களை விளக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுந்த காலப்பகுதி கி.பி 5ம் நூற்றாண்டு என்பர் வையாபுரிப்பிள்ளை.
    தொல்காப்பியத்திற்கான உரையினை எழுதிய இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்போர் முறையே 13ம் நூற்றாண்டிலும் 16ம் நூற்றாண்டிலும் வாழ்;ந்தோர் ஆவர்.
    தொல்காப்பியரும் உரையாசிரியர்களும், கூறும் கருத்துக்கள் மூலமாகவே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் விளங்கப்படுகின்றன, விளக்கப்படுகின்றன.
    கி.பி 200க்கு முன்னர் தோன்றிய இச்சங்க இலக்கியங்களுக்கு
    கி.பி 500இல் (ஏறத்தாள 300 வருடங்களின் பின்) இலக்கணம் வகுக்கப்படுகிறது.
    கி.பி 500 இல் எழுந்த தொல்காப்பியத்திற்கான உரையை இளம்பூரணர் (ஏறத்தாள 800 வருடங்களின் பின்); 1300 இலும்
    நச்சினார்க்கினியர் (ஏறத்தாழ 1100 வருடங்களின் பின்) கி.பி 1600 இலும் எழுதுகிறார்.
    இவர்கள் தம் காலப் புலமை வளர்ச்சிப் பின்னணியிலே சங்க இலக்கியத்திற்கு விளக்கமளித்திருப்பர்.
    தொல்காப்பியர், புவியியல், தன்மையைவிட இலக்கியத் தன்மைக்குச் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தே தம் இலக்கணத்தை வகுத்துள்ளார் என்பர்.
    உரையாசிரியர்கள் இலக்கியத்தின் சமூகப் பின்னணியைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.
    தமிழ்நாட்டுப் புவியியல்,
    தமிழர் சமூகப்பின்னணி
    என்பன பற்றிய அறிவு இலக்கியத்தினூடாக தமிழ் மக்களை விளங்கிக் கொள்ள முக்கியமானவையாகும்.
    புவியியலும், சமூக அமைப்புமே இலக்கிய உற்பத்திக்கான அடித்தளமாகும்
    . இவற்றுள் சமூக அமைப்பு மிக அத்திவாரமானதாகும்
    .
    சிந்தனைகள் வாழ்நிலையிலிருந்தும் வாழ்நிலையி;ன் அசைவுகளிலிருந்தும் அவ்வாழ்நிலையை மனிதர் எதிர் கொள்ளும் முறையிலிருந்துமே உருவாகின்றன.
    ஜரோப்பியர் வருகையின் பின்னரும் நவீன யுக தோற்றத்தின் பின்னரும்
    தொல் பொருளியல் (Archaeology)
    கல்வெட்டியல் (Epigraphy)
    நாணயவியல் Numismatics)(
    நீரடித் தொல்பொருளியல் (under sea Archaeology)
    சமூகவியல் ( Sociology)
    மானிடவியல் (Anthropology)
    பொருளியல் (Economic)
    அரசறிவியல்( Political science)
    இனமரபியல் (Ethnography)
    போன்ற சமூக அறிவியற் துறைகள் தமிழருக்கு அறிமுகமாகியுள்ளன.
    இத்தகைய பலதுறைகளிலும் இன்று செய்யப்படும் ஆராய்ச்சிகளை பண்டைய தமிழர் வாழ்க்கைக்குப் பொருத்தி அவர்களின் வாழ்நிலை, சமூக அமைப்பு என்பவற்றைக் கண்டறியும் முயற்சிகளும் ஆங்காங்கு நடந்தேறியுள்ளன
    . இவற்றால் சங்ககாலம் எனப்படும் காலத்தையும் சங்க இலக்கியங்களையும் புரிந்து கொள்வதில் பல புதிய பரிமாணங்களும் ஏற்பட்டுள்ளன.
    இக் கட்டுரையில் தமிழ் நாட்டில் இதுவரை நடந்தேறியுள்ள அகழ்வாய்வுப் பின்னணியில்
    சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
    மௌனகுரு
    (மீதி நாளை தொடரும்).

No comments:

Post a Comment